தமிழக பாஜக-வில், நிதி நிர்வாகத்தை கையாண்டு வருபவர் அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலையும், பாஜக வளர்ச்சியையும் மிக நெருக்கத்திலிருந்து கவனித்து வரும் அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசியதிலிருந்து...
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பாரபட்சம் குறித்து திமுக அரசு தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறதே..?
இது ஒரு தேய்ந்துபோன ‘கீறல் விழுந்த இசைத்தட்டு' அரசியல். இந்த பட்ஜெட்டில், பாஜக ஆளும்மத்தியப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களை விட, எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்குத் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறிருக்க, புள்ளிவிவரங்களைத் திரித்துக் கூறி திமுக மக்களைத் திசைதிருப்பி வருகிறது.
மாநிலத்தின் கடன் சுமையை ஏற்றிவிட்டதாக திமுக மீது குறை சொல்லும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிநிலையை எப்படிச் சமாளிப்பீர்கள்?
ஒரு அரசு, மாநில வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் கடன் வாங்குவது இயல்பு. ஆனால், திமுகவாங்கிய கடனோ தமிழகத்தின் எதிர்காலத்துக்கான உள்கட்டமைப்பை உருவாக்கப் பயன்படவில்லை. மாறாக, வட்டி கட்டுவதற்கும் அரசின் அன்றாடச் செலவுகளுக்கும் மட்டுமே வீணடிக்கப்படுகிறது. இது தொலைநோக்குப் பார்வையற்ற, நிர்வாகத் திறமையற்ற அரசாங்கம் என்பதற்குச் சான்று. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, மத்திய அரசு ஒதுக்கும் ஒவ்வொரு ரூபாயும் முறையாக மக்களிடம் போய்ச் சேரும்.
மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படும் ஒரு மாநில அரசால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். அந்த வகையில், தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைவது மாநில வளர்ச்சிக்கு ஒரு ‘காம்ப்ளிமென்ட்ரி' பலமாக அமைந்து, புதிய பாய்ச்சலை உருவாக்கும்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக திமுக அரசு மீது குற்றம்சாட்டுகிறீர்கள். மத்திய புலனாய்வு அமைப்புகள் ஏன் இன்னும் இதன் வேரைத் தொடவில்லை?
மதுப்பழக்கம் மற்ற மாநிலங்களிலும் இருந்தாலும், அங்கெல்லாம் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் புழக்கம் இல்லை. அங்கெல்லாம் போதைப்பொருள் பிடிபட்டால், ‘மத்திய அரசு தடுக்கவில்லை' என்று பழிபோட்டுத் தப்பிக்காமல், மாநிலக் காவல்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழகத்திலோ, போதைப்பொருள் பிடிபட்டால் உடனே மத்திய அரசின் மீது பழியைப் போட்டுவிட்டு, மாநில அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை அடுக்குகிறதோ பாஜக?
பாஜக அரசு, காங்கிரஸ் காலத்தைப் போல யாரையும் மிரட்டிப் பணிய வைக்கும் ‘பிளாக்மெயில்’ அரசு அல்ல. இந்தியாவின் புலனாய்வு அமைப்புகளும், நீதிமன்றங்களும் அவற்றின் இயல்பான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த அமைப்புகளின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர, யாரிடமும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது. திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் இன்று மக்கள் மன்றத்தில் வெளிப்படையாக உள்ளன. இதில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
ஒரு முதல்வரின் மகன் துணை முதல்வராக வரக்கூடாதா... வாரிசு அரசியல் என்று சொல்லி உதயநிதியை எதிர்ப்பது சரிதானா?
திமுக-வில் உதயநிதியை விட அனுபவமிக்க தலைவர்களே இல்லையா? ஏன், அந்தக் குடும்பத்திலேயே கனிமொழியால் தலைவராக வரமுடியுமா? கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின், அவருக்குப் பின் உதயநிதி என ஒரு குடும்பத்தின் ஆட்சிதான் அங்கு திணிக்கப்படுகிறது. திமுக-வில் நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்தச் சொல்லுங்கள். குடும்பப் பின்புலம் இல்லாமல், ஒரு சாமானியத் தொண்டனுடன் உதயநிதியை மோதச் சொல்லுங்கள். அப்போது தெரியும், உதயநிதி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது வீட்டுக்கு அனுப்பப்படுவாரா என்று.
உதயநிதியின் அரசியல் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
உதயநிதியின் வளர்ச்சி என்பது திமுக-வில் ரத்தம் சிந்தி உழைத்த மூத்த தலைவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. இன்று திமுக சீனியர்களின் நிலைமை, ‘புலியைப் பார்த்து பயப்படும் பூனை' போலத்தான் இருக்கிறது. தஞ்சை மகளிர் மாநாட்டுக்காகக் கடுமையாக உழைத்தது கே.என்.நேரு.
ஆனால், அதன் மொத்தப் புகழையும் தட்டிச் சென்றது கனிமொழி. ஒரு அமைச்சர், துர்கா ஸ்டாலின் கார் கதவைத் திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இத்தகைய அடிமை கலாசாரம் திமுக மூத்த தலைவர்களின் சுயமரியாதையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
விஜய்யின் எம்ஜிஆர் சென்டிமென்ட் தேர்தலில் அவருக்கு கைகொடுக்குமா?
அரசியலுக்கு இப்போதுதான் அரிதாரம் பூசியிருக்கும் விஜய், தன்னை எம்ஜிஆருக்குச் சமமாக நினைப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. விஜய்யின் இந்த எம்ஜிஆர் சென்டிமென்ட் அரசியல், அவரது தொண்டர்களுக்கு விசில் அடிக்கவும் கைதட்டவும் மட்டுமே பயன்படும். ஆனால், பொதுமக்களுக்கு எம்ஜிஆர் யார், அவரது ஆளுமை என்ன என்பது நன்றாகவே தெரியும்.
பாஜக-வின் இரட்டை இன்ஜினுடன் ஒப்பிட்டு, விஜய் தன்னை டாப் இன்ஜின் என்கிறாரே..?
பாஜக-வின் இரட்டை இன்ஜின் வேகத்துடன் ஒப்பீடு செய்ய விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. கடந்த 11 ஆண்டுகளில், 97 நாடுகளுக்கு மேல் பயணம் செய்து, உலகப் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியாவை 5-வது இடத்துக்கு உயர்த்தியவர் பிரதமர் மோடி. 2047-க்குள் இந்தியாவை உலகின் முதல்நிலை நாடாக மாற்றும் உலகத் தரம் வாய்ந்த தலைவர்கள் இருக்கும் கட்சி பாஜக. இப்படிப்பட்ட ஒரு பேரியக்கத்துடன், இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கும் தவெகவை ஒப்பிடுவது புலியோடு எறும்பை ஒப்பிடுவதற்குச் சமம்.
தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியதற்கு உண்மையான காரணம் என்ன?
தேர்தல் பொறுப்பு என்பது ஒரு தனிநபர் சார்ந்ததல்ல. அது ஒரு நிர்வாகக் கட்டமைப்பு சார்ந்த பணி. மேற்பார்வை செய்யும் திறன் கொண்ட யார் வேண்டுமானாலும் இந்தப் பொறுப்பை ஏற்க முடியும். தற்போது தனது தந்தையின் உடல்நலனைக் கவனிப்பது அண்ணாமலையின் தார்மீகக் கடமையாக உள்ளது. அதையும் மீறி இந்த வேலையை செய்யக்கூடிய கட்டாயம் அவருக்கு இல்லை. அதனால், இந்த பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.