பதிவுத் துறையின் ‘ஸ்டார் 3.0’ திட்டத்தின்கீழ் 18 சேவைகள் உள்ளடக்கிய புதிய செயல் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். உடன், வணிகவரி, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலர் முருகானந்தம், துறைச் செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
சென்னை: பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’ செயல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின்கீழ் 18 புதிய சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’ செயல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், பதிவுத்துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த புதிய செயல் திட்டத்தில், காகிதமில்லாமல் இணைய வழியில் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவரின் அடையாளமானது ஆதார் வழிபெறப்பட்ட குறுஞ்செய்தி அல்லதுவிரல் ரேகை வழி சரிபார்க்கப்பட்டு ஆவணதாரர்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, ஆவணவிவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு மின்னணு ஆவணமாக இணையதளம் வழியாக பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இணையவழி ஆவணப் பதிவு அதேபோல, புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும்போதும், மனைப் பிரிவுகளில் இருந்து மனைகளை மட்டும் வாங்கும்போதும், மக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே இணையவழியாக ஆவணப் பதிவுக்கு சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும். மேலும், அரசு வாரியங்களால் எழுதிக் கொடுக்கப்படும் சொத்துகளுக்கு சம்பந்தப்பட்ட வாரிய அலுவலகத்தில் இருந்தே பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்து, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை உடனே தரவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பிறர் உதவியின்றி, சொத்து தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை உள்ளிட்டு, ஆவணத்தை தாங்களே உருவாக்கும் வகையில், மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் ஆவணத்தை காகிதமில்லா ஆவணப்பதிவு முறையிலோ, அச்சுப்பிரதி எடுத்து வழக்கமான பத்திரப்பதிவு முறையிலோ பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதவிர, நடைமுறையில் உள்ள ஆன்லைன் கட்டண வசதி உடன் ரூ.1,000-க்கும் குறைவான பணத்தை குறுபணப் பரிவர்த்தனை இயந்திரம் (பாயின்ட் ஆஃப் சேல்), க்யூஆர் கோடு, யுபிஐ வழி பணம் செலுத்தும் வசதியும் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மறுவிற்பனை ஆவணத்தில் வாகன நிறுத்துமிடம், மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் நிலையில், கட்டிடக் களப்பணியின்றி பதிவு செய்த அன்றே ஆவணங்களை திருப்பித் தரும் வகையில் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் சொத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகல் கோருதல், வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் அளிக்கும் பொது அதிகார ஆவணங்கள், நீதிமன்ற ஆணைகள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை ஆன்லைன் வழி உடனுக்குடன் மையக் கணினியின் மின்னணு கையொப்பத்துடன் வழங்கும் புதிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓர் ஆவணத்தின் பதிவு எண்ணைக் கொடுத்து தேடுதல் மேற்கொள்ளும்போது, அதனுடன் தொடர்பு உடைய அனைத்து ஆவணங்களும் வில்லங்கச் சான்றில் வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வருவாய் மாவட்டம், வருவாய் வட்டம், வருவாய் கிராமம் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தும் சொத்துப் பரிவர்த்தனை விவரங்களை தேடும் வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பதிவுத் துறையில் தற்போது தனித்தனியாக வில்லங்கச் சான்று வழங்கப்பட்ட நிலையை மாற்றி, ஒரு கிராமம் வெவ்வேறு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், ஒரு கிராமத்தைப் பொருத்து ஒரே ஒரு கணினி கட்டணத்துடன் ஒரே வில்லங்கச் சான்றாக வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
‘TNREGINET’ என்ற கைபேசிசெயலி வழியாக வில்லங்கச் சான்று, ஆவணப் பதிவுக்கான டோக்கன், வழிகாட்டி மதிப்பு, திருமணம், சங்கம், கூட்டு நிறுவனம், சீட்டு நிறுவனம், ஆவணப் பதிவு விவரம், சொத்தின் மதிப்பு கணக்கீடு ஆகியவற்றை எளிதாக அறியும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.