

பெங்களூரு: கர்நாடகாவில் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தாமல் அவையில் இருந்து வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கர்நாடக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவைக்கு காலை 11 மணிக்கு வந்தார். அவை தொடங்கியதும், அரசின் சார்பில் தயாரித்த உரையை வாசிக்காமல், தான் தயாரித்து கொண்டுவந்த உரையில் 2 வரிகளை மட்டுமே அவர் வாசித்தார்.
அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி உரையை வாசிக்க மறுத்து, ஆளுநர் வெளிநடப்பு செய்தார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவரை சூழ்ந்துகொண்டு முழக்கமிட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஆளுநரின் இந்த செயல் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அவர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார். அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுள்ளது. அதனை புறக்கணிப்பது சட்ட விதிமுறை மீறலாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்''என்றார்.
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து பாஜக ஆளாத கர்நாடகாவிலும் ஆளுநர் வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: முதலில் தமிழகம். அடுத்து கேரளம், இப்போது கர்நாடகா.
இதன் நோக்கம் தெளிவானது, வேண்டுமென்றே செய்வது. மாநில அரசுகள் தயாரித்தளிக்கும் உரையை ஆளுநர்கள் வாசிக்க மறுத்து, குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் போல நடந்துகொள்வது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிறுமைப்படுத்தும் செயலாகும். நான் முன்பே தெரிவித்தபடி, சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே இதற்கான தீர்வாக அமையும்.
இந்தியா முழுவதும் இந்த கருத்தை கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாலோசித்து, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த பயனற்ற, நடைமுறைக்கு பொருந்தாத வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர திமுக போராடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.