தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகளுக்கு சாம்பியன்ஸ் கிட், ஸ்மார்ட் வாட்ச், ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் கிட் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜே.மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் வே.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை: பயிற்சியின்போது காயம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகையில் ரூ.39.59 லட்சம் செலவில் 2,600 விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், விளையாட்டு விடுதிகளில் டிஜிட்டல் சாதனங்கள் மூலம் பயிற்றுநர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகள் மேலாண்மை அமைப்பை உபயோகித்தல் மற்றும் வலுப்படுத்துதல் தொடர்பான பயிற்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மேலும், விளையாட்டு வீரர்களின் தினசரி பயிற்சி தேவைகள், மறு சீராக்கம் மற்றும் முழுமையான உடல் நலத்தை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற்றுவரும் 2,600 மாணவர்களுக்கு ரூ.71.15 லட்சம் மதிப்பில் சாம்பியன்ஸ் கிட்களையும் துணை முதல்வர் வழங்கினார்.
அதோடு இந்த ஆண்டு புதிதாக விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்பட்டுள்ள 950 பேருக்கு ரூ.20.10 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வாட்சுகளையும் வழங்கினார். இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் மாணவர்கள் தங்கள் பயிற்சியின் அளவுகள், மறு சீராக்க நிலை மற்றும் தினசரி செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.
மேலும், விளையாட்டு வீரர்கள் கடுமையான பயிற்சி மேற்கொள்ளும்போது காயம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகையில் ரூ.39.59 லட்சம் செலவில் 2,600 விடுதி மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் உபகரணங்களை துணை முதல்வர் வழங்கினார்.
அதோடு தடகள விளையாட்டு மேலாண்மை செயலியின் பயன்பாடு குறித்து பயிற்சியாளர்கள், விளையாட்டு விடுதி மேலாளர்கள், மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர்கள் மற்றும் மண்டல முதுநிலை மேலாளர்களுக்கான வழிகாட்டி பயிற்சியையும் அவர் தொடங்கிவைத்தார்.
இவ்விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்-செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் வே.மணிகண்டன், பொது மேலாளர் எல்.சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.