சென்னை: தமிழக காவல் துறையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் போலீஸார் குறித்து புகார் தெரிவிக்க ‘லஞ்ச ஒழிப்பு பிரிவை (Internal Vigilance Cells) உருவாக்கி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் துறையில் லஞ்சத்தை ஒழிக்க ‘‘லஞ்ச ஒழிப்பு தனிப்பிரிவை’’ ஆணையாளர் அமல்ராஜ் கடந்த 11-ம் தேதி தொடங்கி வைத்து, புகார்களை தெரிவிக்க செல்போன் எண்ணையும் வெளியிட்டார்.
இதற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. லஞ்சம் கேட்கும் போலீஸார் பற்றி இந்த எண்ணில் மக்கள் புகார் தெரிவித்தனர்.
போலீஸாரும் தங்களிடம் லஞ்சம் கேட்கும் அமைச்சுப் பணியாளர்கள் குறித்து இதில் புகார் தெரிவித்தனர். இந்த லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு பிரிவை தொடங்க தமிழக காவல்துறை முடிவு செய்தது.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களை தடுப்பது, கண்காணிப்பது மற்றும் அவை தொடர்பான புகார்களை விசாரிப்பது இப்பிரிவுகளின் முக்கிய நோக்கமாகும்.
பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கும் தனித்தனி செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினருக்கு எதிரான லஞ்சம், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் இந்த எண்களில் தெரிவிக்கலாம். புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
புகார் அளித்ததற்காக எவ்வித அச்சுறுத்தல், துன்புறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்கும் அவர்கள் ஆளாகமாட்டார்கள். பெறப்படும் புகார்கள் நியாயமான முறையில், பாரபட்சமின்றி உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அதோடு, இந்த கண்காணிப்பு பிரிவுகளின் செயல்பாடுகள் எஸ்பி முதல் டிஜிபி வரையிலான உயர் அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி முன்வந்து காவல்துறையினரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு டிஜிபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.