கோப்புப்படம்

 
தமிழகம்

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வு டிச.20-ல் நடைபெறும்: டிஆர்பி அறிவிப்பு

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடைபெறும் என்றும். இதற்கு நாளை (அக்.27) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு கடந்த ஜூலை 4, 5-ம் தேதிகளில் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த 12-ம் தேதி வெளியிடப்பட்டன.

தேர்வெழுதிய 2.17 லட்சம் ஆசிரியர்களில் 1.10 லட்சம் பேர் தோல்வி அடைந்தனர். இந்நிலையில் தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்காக அடுத்த சிறப்பு டெட் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்படும். அன்றைய தினம் காலையில் தாள்-2 தேர்வும், (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது), பிற்பகல் தாள்-1 தேர்வும் (இடைநிலை ஆசிரியர்களுக்கானது) நடைபெறும். இத்தேர்வுக்கு அக்டோபர் 27 (நாளை) முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வெழுத தகுதியுடையவர் ஆவர். கூடுதல் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் பொது டெட் தேர்வு

சிறப்பு டெட் தேர்வை தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மட்டுமே எழுத முடியும். பணியில் இல்லாத பிஎட் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் எழுத முடியாது. அவர்கள் பொது டெட் தேர்வை மட்டுமே எழுத முடியும். பொது டெட் தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், பிஎட், மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு பொது டெட் தேர்வை எதிர்பார்த்து ஏறத்தாழ 3 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.

டெட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறை ஆகும். இந்த ஆண்டு ஜூலை, டிசம்பர் மாதத்தில் டெட் தேர்வுகள் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ஆனால், அதன்படி ஜூலையில் டெட் தேர்வு நடத்தப்படவில்லை. டிசம்பரில் நடத்துவதற்கும் இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பொது டெட் தேர்வும் விரைவில் நடத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT