தமிழகம்

கரூரில் தீபாவளி சிறப்புப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர், நடத்துநர் காயம்

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் காந்திகிராமம் பகுதியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட அரசு சிறப்புப் பேருந்து ஒன்று சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு சிறப்பு பேருந்து நேற்றிரவு இயக்கப்பட்டது.

திருச்சியில் பயணிகளை இறக்கிவிட்டு திருப்பூருக்கு அரசுப் பேருந்து பயணிகள் யாருமின்றி காலியாக திரும்பியது. இன்று (நவ. 7ம் தேதி) காலை 5.15 மணிக்கு கரூர் காந்திகிராமம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து இறங்கிய பேருந்து அங்கிருந்த சாலை மையத்தடுப்பு மீது பயங்கரமாக மோதிக் கவிழ்ந்தது. இதில் மையத் தடுப்பில் இருந்த மின் கம்பம் சிமெண்ட் ப்ளாக்குகள் சேதமடைந்தன.

ஓட்டுநர் ஆறுமுகம், நடந்துநர் குமரேசன் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் 3 மணி நேரத் திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். அரசுப் போக்குவரத்து அலுவலர்கள், போலீஸார் கிரேன் மூலம் பேருந்தை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

வாகனங்களில் சென்றவர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பேருந்து கவிழ்ந்து கிடப்பதை வேடிக்கை பார்த்ததுடன் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT