கோப்புப் படம்: ஜெ.மனோகரன்

 
தமிழகம்

குடற்புழு நீக்க மாத்திரை வழங்க தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்

சுகாதாரத்துறை தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10-ம் தேதி தேசிய குடற்புழு நீக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதன்படி, தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு (10-ம் தேதி) தமிழகம் முழுவதும் 54,481 அங்கன்வாடி மையங்கள், 11,723 துணை சுகாதார நிலையங்கள், 56,483 பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

54,481 அங்கன்வாடி பணியாளர்களும், 59,700 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், 6,543 மருத்துவர்கள், 12,456 கிராம சுகாதார செவிலியர்கள், 2,650 ஆஷா பணியாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.

காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில் 1 முதல் 19 வயது வரையிலான 2.06 கோடி குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான 52.44 லட்சம் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களில் விடுபட்டவர்களுக்கு வரும் 17-ம்தேதி நடைபெறும் சிறப்பு முகாம்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட இருக்கிறது.

1 முதல் 2 வயதிலான குழந்தைகளுக்கு 1/2 மாத்திரையும் (200மிகி), 2 வயது முதல் 19 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு ஒரு மாத்திரையும் (400மிகி) வழங்கப்படும். இந்த அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது.

அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துச் சுறுசுறுப்பாக இருக்கவும், நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT