சென்னை: பொதுமக்களை அச்சுறுத்தும் ஆக்ரோஷமான நாய்களை அடைக்க, மாநகராட்சி சார்பில் பெருங்குடியில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஏற்கெனவே நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள் இயங்கி வருகின்றன.
அதன் பிறகு செட்டிமேடு, திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் கண்ணப்பர் திடல் என கூடுதலாக 5 இடங்களும் நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்திப்பட்டு, நந்தம்பாக்கம், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, சோழிங்கநல்லூர் உயிரி எரிவாயு நிலையம் ஆகிய 4 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, 28 நாய் பிடிக்கும் வாகனங்கள், 159 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, நாளொன்றுக்கு சராசரியாக 150 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் புதிதாக 15 நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இதுவரை 88,240 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் வெறிநோய் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டத்தில் இதுவரை 1,47,538 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர் நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெறிநோய் பாதிப்பு (Rabies) மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் (Canine Distemper) எனும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கடிக்கும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தெருநாய்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்கான பிரத்யேக தனிமைப்படுத்தல் மையம் (Quarantine Center) பெருங்குடி மண்டலம், 189-வது வார்டு, ம.பொ.சி. நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் நோயுற்ற 100 தெருநாய்களை பராமரிப்பதற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெருநாய்கள் தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.