சென்னை: காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து அக். 1-ம் தேதி 1,985 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: அக்.2-ம் தேதி (காந்தி ஜெயந்தி), 3-ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்.1-ம் தேதி 1,580 பேருந்துகளும், 2-ம் தேதி 745 பேருந்துகளும், 3-ம் தேதி 895 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை 220 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 115 பேருந்துகளும், சனிக்கிழமை 115 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து அக்.1-ம் தேதி 185 பேருந்துகளும், அக்.2 மற்றும் 3-ம் தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஒசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 90 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபோல் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் அக்.4-ம் தேதி 1,471 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை 28,402 பயணிகளும், வெள்ளிக்கிழமை 5,497 பயணிகளும் சனிக்கிழமை 6,744 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 24,123 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் www.tnstc.in இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.