சென்னை: தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாளை (10-ம் தேதி), நாளை மறுநாள் (11-ம் தேதி) மற்றும் 12-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 575 பேருந்துகளும், நாளை மறுநாள் 395 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 100 பேருந்துகளும், நாளை மறுநாள் 90 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கண்ட ஊர்களுக்கு 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய நாட்களில் 735 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,104 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5,231 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 6,562 பயணிகளும் மற்றும் ஏப்.14ம் தேதி 5,285 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்
விஷு பண்டிகையை முன்னிட்டு, சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, மங்களூரு சென்ட்ரலில் இருந்து இன்று (9-ம் தேதி) இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06128), நாளை நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (10-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06153), மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை வந்தடையும்.
அங்கிருந்து ஏப்.15-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06154), மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூரில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இதுதவிர, மங்களூரு சந்திப்பு - திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.