கோவையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. படம்: ஜெ.மனோகரன்
கோவையை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் தொடர்ச்சியாக அதிமுக கோட்டையாகவே இருந்து வருகிறது. இந்த முறை அதைத் தகர்த்து மேற்கு மண்டலத்தில் வெற்றிகொடி நாட்டுவதற்காக செந்தில்பாலாஜியை மண்டலப் பொறுப்பாளராக கோவைக்கு அனுப்பி இருக்கிறது திமுக. இதனால், இம்முறை கோவையில் கொடிநாட்டப் போவது செந்தில்பாலாஜியா அல்லது பழையபடி எஸ்.பி.வேலுமணியே தானா என்கிற எதிர்பார்ப்பு இரண்டு கட்சிக்குள்ளும் இருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ‘‘திமுககாரன் கடைசி வரை பூத்தில் பணியில் இருப்பான்’’ என வேலுமணி பேசிய வீடியோ கிளிப்பிங் சமூகவலைதளங்களில் வைரலாக ஓடி சமீபத்தில் தான் ஓய்ந்தது. இந்நிலையில், அடுத்த வைரலுக்கு கன்டென்ட் கொடுத்திருக்கிறார் வேலுமணி. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக செயற்குழுக் கூட்டம், கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பேசிய அதிமுக எம்எல்ஏ-க்கள் பலரும் “கோவை அதிமுக-வின் கோட்டை, பழனிசாமியின் கோட்டை, எஸ்பிவி-யின் கோட்டை. இதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என வீரவசனம் பேசினர்.
அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு பேசவந்த எஸ்.பி.வேலுமணி, ‘‘கோவை பழனிசாமியின் கோட்டை, எஸ்பிவி-யின் கோட்டை. யாரும் ஓட்டை போட முடியாது என்கிறீர்கள். ஆனால், ஓட்டை போட வேண்டுமென கையில் சம்மட்டியை வைத்துக் கொண்டு ஒரு ஆள் (செந்தில்பாலாஜி) தயாராக உள்ளார். அதை எடுத்து வீசிவிட்டு, ஓட்டையே போடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அவர்கள் (திமுக-வினர்) கொலுசு கொடுப்பார்கள், பணம் கொடுப்பார்கள். தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். திமுக-வினர், பார்த்தால் எந்த வேலையும் செய்யாதது போல் இருப்பார்கள்.
ஆனால், எல்லா வேலையும் செய்து கொண்டிருப் பார்கள். இன்றைய சூழலில் திமுக-வை குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்த நேரம், இந்தக் காலம் மிக முக்கியமானது. எதிரியை எந்தக் காலத்தில் நாம் முந்தவிட்டுவிடக் கூடாது’’ என்றார். வேலுமணியின் பேச்சைக் கேட்ட பெரும்பாலான நிர்வாகிகள், ‘‘அண்ணன் நம்மை எச்சரிக்கிறாரா அல்லது திமுக-வினரை புகழ்கிறாரா?’’ என கமென்ட் அடித்தபடியே கலைந்து சென்றனர். வேலுமணிக்கு நெருக்கமானவர்களோ, “இப்படியெல்லாம் தட்டிவிட்டால் தான் கட்சிக்காரங்க சுறுசுறுப்பாகி ஆளும் கட்சிக்கு இணையா சுணக்கமில்லாம வேலை செய்வாங்கன்னு அண்ணன் அப்படிப் பேசிருக்காரு. மத்தபடி, எத்தனை பாலாஜிகள் வந்தாலும் அவருக்கிட்ட நிக்க முடியாது” என்கிறார்கள்.