“பொங்கலுக்குள் கூட்டணியை அறிவிப்போம்” - ராமதாஸ் தகவல்

ராமதாஸ்

ராமதாஸ்

Updated on
2 min read

“அன்புமணி ஒரு மோசடிப் பேர்வழி என்பதால், அவருடன் கூட்டணி அமைப்பார்களா என்பது சந்தேகம். மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பொங்கலுக்குள் எங்கள் கூட்டணியை அறிவிப்போம்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக, திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ராமதாஸால் தொடங்கப்பட்ட பாமக-வை உரிமை கொண்டாட அன்புமணிக்கு தகுதி இல்லை. வியர்வை, ரத்தம் சிந்தி 96 ஆயிரம் கிராமங்களுக்கு ஓடியோடி உழைத்து கட்சியை வளர்த்துள்ளேன். நான் செய்த சத்தியத்தையும் மீறி, அன்புமணியை கட்சியில் சேர்த்து மத்திய அமைச்சராக்கினேன். ‘எனக்கே வேட்டு வைப்பார்’ என்று அப்போது தெரியாது.

அன்புமணி செய்த தில்லுமுல்லு தெரியவந்ததும், பாமக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டேன். கட்சித் தலைமை பதவியை கொடுத்த என்னிடம் இருந்து கட்சியை பறிக்க சதித்திட்டம் தீட்டி, சூழ்ச்சியுடன் செயல்படுவதை மக்கள் அறிவார்கள். டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, பாமக-வில் அன்புமணி இல்லை. அவரிடம் தலைமைப் பண்பு இல்லாததால், தலைவர் பதவியை நானே எடுத்துக்கொண்டேன். பாமக என்னிடம்தான் உள்ளது. தொண்டர்கள் என்னிடம் உள்ளனர்.

பணம் மற்றும் காருக்கு ஆசைப்பட்டு அவருடன் சிலர் சென்று விட்டனர். அன்புமணியின் துரோகத்தை தொண்டர்களும், மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணியால் தேர்தலில் யார் நிறுத்தப்பட்டாலும் பாமக-வினரும், மக்களும் வாக்களிக்கமாட்டார்கள். பாமக தொடர்பாக நாங்கள் தொடர்ந்த வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாமக சார்பில் அன்புமணி கூட்டணி பேசுவது என்பது நீதிமன்ற அவமதிப்பாகும். என் தலைமையில்தான் கூட்டணிபேச முடியும். நான் இருக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். அதிமுக-வுடன் பாமக கூட்டணி என ஒரு நாடகம் நடத்தப்பட்டுள்ளது. என் தலைமையில் கூட்டணி அமையும் என்று நான் சொல்ல முடியாது; சொல்லக்கூடாது. என் கட்சியைவிட வலுவான கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. அதனால், இந்த வேலையை நான் செய்ய முடியாது. இதனால் என்னிடம் வலு இல்லை எனச் சொல்ல முடியாது. வலுவுடனும் பலமாகவும் இருக்கிறேன். நல்ல கட்சிகளுடன் சேர்ந்து அமைப்பதுதான் கூட்டணி.

யாருடன் அன்புமணி கூட்டணி பேசினாலும், அது செல்லாது. அன்புமணி ஒரு மோசடிப் பேர்வழி என்பதால், அவருடன் கூட்டணி அமைப்பார்களா என்பது சந்தேகம். மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பொங்கலுக்குள் கூட்டணியை அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அன்புமணி இடம் பெற்றுள்ளதால் அதிமுக-வை புறக்கணிப்பீர்களா என்று கேட்டதற்கு, “இதற்கு இன்னும் 2 நாட்களில் பதில் கிடைக்கும்.

திமுக-வுடன் கூட்டணி அமைக்கப்படுமா அல்லது தவெக மாற்று வாய்ப்பாக இருக்கக்கூடுமா எனக் கேட்கிறீர்கள். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். எந்த மாற்றம் வேண்டுமானாலும் வரும். கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

பழனிசாமியிடமும் அன்புமணி பொய் சொல்லியிருக்கலாம். இதுவரை அன்புமணியை அதிமுக அங்கீகாரம் செய்யவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரியவில்லை. பழனிசாமிக்கு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. யாரையும் விமர்சிக்கவில்லை” என்றார்.

<div class="paragraphs"><p>ராமதாஸ் </p></div>
“தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” - ராமதாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in