எஸ்.பி.வேலுமணி
கோவை: “எனக்கு பொதுச் செயலாளர் ஆகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி, கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம். ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம்.
எங்களையெல்லாம் உருவாக்கியது அதிமுக தான். இரண்டு தேர்தல்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது பெரிய வருத்தம்தான். மூன்று மாதத்துக்கு முன்பு தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம்.
ஆனால், இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். எங்களை பொறுத்தவரை கட்சி நன்றாக இருக்க வேண்டும். அதிமுக எங்களுடைய கட்சி, எங்களை வளர்த்த ஓர் இயக்கம். நாங்கள் ஏன் அதிமுகவிலிருந்து செல்ல வேண்டும். அதுபோன்ற கேள்வி கேட்பதே தவறு.
ஜெயலலிதா மறைந்த பிறகு பல்வேறு தேர்தல்கள் வந்தன. 2021-ல் கூட அதிமுக தான் வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால், அப்போது தேமுதிக இருந்தது, சரத்குமார் கட்சி இருந்தது. அவர்களெல்லாம் எங்கள் கூட்டணியில் இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் சேர்க்க முடியாமல் போய்விட்டது.
அமமுக இருந்திருந்தால் 2021-ல் அதிமுக ஆட்சி தொடர்ந்திருக்கும். 2024-ல் பாஜகவுடன் இணைந்திருந்தால் இந்நேரம் நான்கு மத்திய அமைச்சர்கள் கூட இருந்திருப்பார்கள். இம்முறை தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் சேர்க்க முடியாமல் போய்விட்டது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
இனிமேல் பொதுச் செயலாளர் பற்றி விமர்சனம் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. இன்றைய சூழலில் வெளியில் சென்றவர்கள், பிரிந்து சென்றவர்கள், அனைவரையும் ஒன்று சேர்த்து பொதுச் செயலாளர் அரவணைப்பார் என்று நம்புகிறோம். கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கட்சி பலப்பட வேண்டும்.
கட்சி நன்றாக இருக்க வேண்டும். அதிமுக பலப்படும். அனைத்தும் சரியாகும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களுடைய ஒரே எண்ணம், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்பதுதான். எனக்கு பொதுச் செயலாளர் ஆகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை.
தற்போது பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய அவரை அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தான் இதற்கு முன்பும் வைத்துள்ளோம். இன்று உள்ள பிரச்சினையை ஆராய்ந்து, அனைவரையும் அரவணைத்து ஒன்று சேர்த்தால் கட்சி பலப்படும்.
சசிகலா மட்டுமல்ல, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் வரவேண்டும். ஒன்றிணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறார்கள். அதை அனைத்தையும் பொதுச் செயலாளர் செய்வார் என்று நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.