தமிழகம்

“அதிமுகவின் 2 கோடி உறுப்பினர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர்” - பழனிசாமி

டி.ஜி.ரகுபதி

கோவை: ‘அதிமுகவின் 2 கோடி உறுப்பினர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர். அவரை பற்றி இங்கு கேள்வி எழுப்ப வேண்டாம். தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கோவை விமான நிலையத்தில் இன்று (நவ.21) செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் தெளிவான நிர்வாகம் இல்லை. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்த அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது நிர்வாக தோல்விகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி சுமத்தி வருகிறது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்து உள்ளது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டுத்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை சரியாக முன்வைக்க வேண்டும். விசாரணையின் முடிவில்தான் இந்த விவகாரம் குறித்து முழுமையாக பேச முடியும்.

தவெக பொறுப்பேற்ற 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசு சரியான கவனம் செலுத்தவில்லை.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் ரூ.700 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய புலனாய்வு பிரிவு பிடித்து உள்ளது. இதற்கு முன்பு நாகப்பட்டினத்தில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக த.வெ.க. நிர்வாகி வீட்டில் மெத்தம்பெட்டமைன் தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தமிழகத்திலேயே போதைப்பொருள் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று அறிக்கை மட்டும் கொடுத்தால் போதாது.

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். ஒரு எம்.எல்.ஏ., ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

எம்.எல்.ஏ. காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்வதும், போலீஸாரின் செல்போனை பிடுங்கி பார்ப்பதும் எந்த வகையில் நியாயம்? யார் என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் மக்கள் பிரதிநிதிகள் செயல்படுகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. குடிநீர் தேவைக்குக்கூட மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் போதுமானதாக இல்லை. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று அம்மாநில முதல்வரே கூறி வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற தமிழக முதல்வர் விஜய் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த ஆட்சி காலத்தில் யூனிட் ரூ.20-க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததையே ஊழல் என்று கூறினோம். தற்போது ரூ.37-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதில் ஊழல் நடைபெற்றிருக்காதா என்ற கேள்வி எழுகிறது.

அ.தி.மு.க.வில் 41 எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கிறார்கள். இப்படி குறைந்த அளவில் எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு எங்களால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்?

ஆட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக நமக்கு வரும் தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்துக்கு சென்றுவருகிறது. இந்த ஆட்சி வந்த பின்னர் தமிழகத்துக்கு என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டு அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்து உள்ளது? ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. இதனால் மக்களுக்கு இந்த ஆட்சி மீது வெறுப்புணர்வு ஏற்பட்டு விட்டது. அதனால் இந்த ஆட்சியை எதிர்க்கட்சிகள் யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே கவிழ்ந்துவிடும்.

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் வரும்போது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அப்போது எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் செங்கோட்டையனும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் திருமண விழாவில் ஒன்றாக இருந்தது தொடர்பாக பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்,‘‘அந்த வீடியோவை நீங்களே வெளியிட்டு உள்ளீர்கள். கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் குறித்து அந்தந்த கட்சியினரிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும். அதிமுகவின் 2 கோடி உறுப்பினர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர். அவரை பற்றி இங்கு கேள்வி எழுப்ப வேண்டாம்’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT