தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கிய பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி.
‘‘உங்களுக்காகப் போராடுபவர்கள்தான் நிஜ ஹீரோக்கள், ஹீரோக்களை திரையில் தேடாதீர்கள்’’ என்று விஜய்யை மறைமுகமாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.
தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை காஞ்சிபுரத்தில் நேற்று சவுமியா அன்புமணி தொடங்கினார். முதலில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்திய அவர், பின்னர் அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது:
பெருமைமிகு காஞ்சிபுரம் மண்ணில் இந்த தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கியுள்ளேன். ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா' என்ற தலைப்பில் இந்தப் பயணம் தொடங்கியுள்ளது. பெண்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதனைத் தர வேண்டியது அரசின் கடமை. படிப்பு, மருத்துவம், விவசாயம் அனைத்தையும் இலவசமாகத் தர வேண்டும். அவ்வாறு தந்தாலே மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். இந்த மூன்றையும் தருவோம் என்று கூறும் ஒரே கட்சி பாமகதான்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுக்க முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் சிப்காட்களில் நிலம் கொடுத்தவர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடமில்லை.
75 சதவீதம் இந்த மண்ணைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுப்போம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இந்த மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை. தேர்தலில் இதனை நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். உங்களுக்காக போராடுபவர்கள்தான் நிஜமான ஹீரோக்கள். ஹீரோக்களை திரையில் தேடாதீர்கள்.
மகளிருக்கு அதிகாரம் வேண்டும். அவர்களுக்கு ஆயிரம் கொடுத்தால் போதுமா? அவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் டாஸ்மாக்கில் கொடுத்த பணம்தான். உங்களிடம் ஓட்டு வாங்கி ஏமாற்றுவதற்காக இந்தத் தொகை கொடுக்கப்படுகிறது. மதுக்கடைகளை மூட வலியுறுத்துங்கள். இந்த ஆயிரம் ரூபாய் உங்களுக்கு வேண்டாம். இந்தப் பணத்தை சம்பாதிக்கும் அளவில் பெண்கள் வலிமை பெற வேண்டும். பிஹாரில் மது ஒழிப்புகொண்டு வந்துள்ளனர்.
அது ஏன் தமிழ்நாட்டில் முடியவில்லை? மதுவிலக்கை அமல்படுத்தி பெண்கள் வாக்களித்துதான் நிதீஷ்குமார் முதல்வரானார். மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையை மருத்துவர் அன்புமணி மட்டுமே எடுப்பார் என்றார்.