தமிழகம்

“அது வதந்தியே...” - தமிழக அமைச்சர் பதவி குறித்து சவுமியா அன்புமணி பதில்

இரா.தினேஷ்குமார்

விழுப்புரம்: “அமைச்சராகப் போகிறேன் என்ற வதந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்” என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிகோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி இன்று (செப்.30) சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, முழு மதுவிலக்கை வலியுறுத்தி பாமக சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ள நிலையில், முழு மதுவிலக்கில் கள் இடம்பெறுமா, இடம்பெறாதா என சவுமியா அன்புமணி எம்எல்ஏ விளக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, “பாமக கொள்கையில் என்ன சொல்லியிருக்கிறதோ, அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். மது இல்லாத தமிழகம் என்ற நிலை உருவாக வேண்டும். தமிழகத்தில் அதிகளவில் மது கிடைக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்க இருக்கிறோம்.

சமூகப் பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த பயணயத்தை தொடங்கி இருக்கிறோம். இதனை இயக்கம் என கூற வேண்டும். சென்னையில் அக்டோபர் 2-ம் தேதி விழிப்புணர்வு காட்சிகளுடன் இயக்கம் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் நடத்த உளளோம்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் அதிகம் பாதிக்கக்கூடிய இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். ஜென்ஸீ தலைமுறையினரிடமும் விழிப்புணர்வை கொண்டு சேர்ப்போம். மது இல்லா தமிழகம் என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

நீண்ட விளக்கத்தை கூறிய சவுமியா, முழு மதுவிலக்கில் கள் இடம்பெறுமா, இடம்பெறதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் கூறாத நிலையில், இது தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பியபோது, “பாமக கொள்கைப்படி, மருத்துவர் அன்புமணி சொல்லியிருப்பார், அதேதோன்” என மீண்டும் மழுப்பலாக பதிலளித்தார்.

பின்னர், எஸ்ஐஆர் சீர்திருத்தத்தால் தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, “எஸ்ஐஅர் குறித்து நிறைய தகவல்கள் தெரிய வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எஸ்ஐஆர் சீர்த்திருத்தம் நடத்தப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் தேவையானதா, குளறுபடி நடைபெற்றுள்ளதா என்ற முழு விவரம் தெரிந்த பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும்” என்றார்.

தனிப்பட்ட முறையில் செயல்பட்டுள்ளார் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கும், “இது தொடர்பான முழு விவரம் தெரிய வேண்டும். இந்த புகார் உண்மையா, இல்லையா, தவறு நடைபெற்றுள்ளதா என பார்க்க வேண்டியிருக்கிறது” என்றார்.

முழு மதுவிலக்கில் கள் இடம்பெறுமா, எஸ்ஐஆர் திருத்தம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விகளுக்கு சவுமியா அன்புமணி நேரடியாக பதில் அளிக்காமல் நழுவினார்.

திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை இடையே ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறித்து மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எம்பி அழுத்தம் கொடுப்பாரா என்ற கேள்விக்கு, “இது தொடர்பாக பேசி இருக்கிறார். தனி வட்டாட்சியர் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது” என்றார்.

தமிழக இடைத்தேர்தலுக்கு பிறகு தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறும், சவுமியா அன்புமணி அமைச்சராக போகிறார் என பேசப்படுவது குறித்த கேள்விக்கு, “இதுபோன்ற வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்” என்றார்.

SCROLL FOR NEXT