சென்னை: “கர்நாடகாவில் பெண்ணாற்றில் 320 கிமீ பாயும் காவிரி, தமிழ்நாட்டில் 420 கி.மீ. பயணம் செய்கிறது. அதனால் காவிரி நீருக்கான உரிமை தமிழ்நாட்டுக்கு அதிகம் உள்ளது. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 178 டிஎம்சி தண்ணீரில் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காத சூழல் ஏற்படும்,” என்று பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.
தமிழக அரசின் 17வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. இதில், இரு மொழி கொள்கை, மேகேதாட்டு அணை எதிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இரண்டாம் நாளான இன்று காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கு கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு அவையில் இருந்த அனைத்துக் கட்சிகளும் தங்களது ஆதரவை பதிவு செய்தன.
முன்னதாக, பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி தீர்மானம் குறித்து பேசினார். அப்போது அவர், ”குடகு மலையில் தோன்றி தருமபுரி வாயிலாக தமிழ்நாட்டுக்குள் காவிரி நீரானது நுழைகிறது. 320 கி.மீ. கர்நாடகாவின் பெண்ணாற்றில் பாயும் காவிரி, தமிழ்நாட்டில் 420 கி.மீ. பயணம் செய்கிறது. அதனால் காவிரி நீருக்கான உரிமை தமிழ்நாட்டுக்கு அதிகம் உள்ளது.
கிட்டத்தட்ட 740 டிஎம்சி தண்ணீரில் 400 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு உரிமையானது. ஆனால் நாளடைவில் 400 டிஎம்சி தண்ணீர் என்பது குறைந்து 205 முதல் 195 டிஎம்சி ஆக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதிலும் குறைந்து இந்த ஆண்டு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியின்றி முதல்மடை மாநிலங்கள் ஆற்றின் குறுக்கே எந்த ஒரு கட்டுமானங்கள் செய்யக்கூடாது.
கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, கபினி மற்றும் ஹேமாவதி என நான்கு அணைகள் 115 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனுடன் புதிதாக கட்டப்படும் மேகேதாட்டு அணையில் சுமார் 75 டிஎம்சி தண்ணீர் தேக்கிவைக்கப்படும். மொத்தம் 190 டிஎம்சி நீர் தேக்கி வைக்க முடியும். இப்படி 5 அணைகள் மூலம் 190 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவிலேயே தேக்கிவைக்கப்பட்டுவிட்டால், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 178 டிஎம்சி தண்ணீரில் ஒரு செட்டு நீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காத சூழல் ஏற்படும்.
இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். மிகப் பெரிய குடிநீர் பிரச்சினை ஏற்படும். காவிரி நீரை நம்பித் தான் ஐந்தரை கோடி தமிழக மக்கள் உள்ளனர். மொத்தமாக காவிரி நதிநீரில் கர்நாடகவுக்கு தேவைப்படும் நீரின் அளவு 284 டிஎம்சி மட்டுமே. இருப்பினும் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீர் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதை அரசு கவனிக்க வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி திறக்க வேண்டிய நீர் நடப்பாண்டு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பருவமழை பொய்த்துள்ளதால் குறுவை சாகுபடி வழங்கும் அளவிற்கு அணையில் போதிய நீர் இருப்பு இல்லை.
அப்படிப்பட்ட சூழலில் காவிரி நீர் படுகையில் கர்நாடக அரசு எந்த விதமான அணையையும் கட்ட அனுமதிக்கக் கூடாது. எனவே மேகேதாட்டு அணைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை பாமக சார்பில் ஆதரிக்கிறேன்.” என்று எம்எல்ஏ சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.