மகாத்மா காந்தியின் 158-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தை பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: மது இல்லா தமிழகம் என்ற புதிய இயக்கத்தை பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி சென்னையில் நேற்று தொடங்கினார்.
இந்த நிகழ்வில் சவுமியா அன்புமணி பேசியதாவது: இது ஒரு அரசியல் சார்பற்ற இயக்கம். இந்த இயக்கத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். இதன்மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்த முறை மதுஒழிப்பு பிரச்சாரத்தை தீவிரமாக்க முடிவெடுத்து மக்களோடு இணைந்து வெற்றி பெறும் வகையில், பிரச்சாரத் திட்டத்தை வடிவமைக்க இருக்கிறோம். கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பிரச்சாரம் மேற்கொண்டு மதுஒழிப்பை வலியுறுத்த உள்ளோம்.
கடந்த 25 ஆண்டுகளில் தமிழக அரசின் மதுபான வருவாய் 14 மடங்கும், மதுபான விற்பனை 5 மடங்கும் அதிகரித்துள்ளது. இரண்டு தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். மூன்றாவது தலைமுறையை மதுப்பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
அதனால், இந்த மதுஒழிப்பு பிரச்சாரத்தில் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும். தமிழகத்தில் மதுஒழிக்கப்பட்டால்தான், பெண்களின் வாழ்க்கை ஒளிமயமாக மாறுவது மட்டுமின்றி, அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும். சாலை விபத்துக்களும், மரணங்களும் பெருமளவு குறையும். குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்படுவார்கள். இளைய தலைமுறை காப்பாற்றப்படும்.
மதுவை படிப்படியாக ஒழிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கான நேரத்தையும் கடை எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கக் கூடாது. மதுஒழிப்பு கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக பாமக பொருளாளர் திலகபாமா வரவேற்றார். நிகழ்வில் பாமக மற்றும் பசுமைத் தாயகம் சார்பில் நடந்த மதுஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற பெண்கள் பங்கேற்றனர். இதனிடையே தைலாபுரத்தில் முதல் கையெழுத்தை போட்டு, விழிப்புணர்வு இயக்கத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் தலைமையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை பாமகவினர் ஏற்றனர்.