தமிழகம்

பாமகவுக்கு வாக்களிக்காத பெண்கள்! - சவுமியா அன்புமணி வேதனை

செய்திப்பிரிவு

பாமக மகளிரணி சார்பில் தொடர்ச்சியாக 100 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ளரங்க கூட்டம் நடத்தி 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை அடுத்த உத்தண்டியில் நடந்தது. பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாமக மகளிரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சவுமியா அன்புமணி பேசியதாவது: தேர்தலுக்கு முன்பே போதை உள்ளிட்டவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்களை மகளிரணியினர் கிராம அளவில் நடத்த வேண்டும். பாடல் , நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாமக சார்பில் உள்ளரங்க கூட்டங்கள் தொகுதி வாரியாக நடத்தப்பட வேண்டும். தேர்தல் நெருங்கும்போது கடைசி நேரத்தில் சென்று மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறக்கூடாது.

தருமபுரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆண்கள் சரியாக வாக்களித்து விடுகின்றனர். பெண்கள்தான் கடைசி நேரத்தில் மனம் மாறி மாற்று கட்சிகளுக்கு வாக்களித்து விடுகின்றனர் என்று ஒரு பெண் என்னிடம் கூறினார். தேர்தலுக்கு பின் வாக்குப்பதிவு நிலவரங்களை எடுத்து பார்த்தபோது அது உண்மை என்பது தெரியவந்தது.

பல ஊர்களில் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்த நிலையில் நிர்வாகிகளே அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசு ரூ.1,000 கொடுப்பது எத்தனை நாள் அவர்களுக்கு உதவும். நல்ல திட்டங்கள் தான் பெண்களுக்கு உதவும் என பெண்களுக்கு நிர்வாகிகள் எடுத்து கூற வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT