கோப்புப் படம் 
தமிழகம்

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

கேரளத்தில் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!

ச.கார்த்திகேயன்

சென்னை: கேரளம் மற்றும் தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரேபியக் கடலின் மேலும் சில பகுதிகளுக்கு, லட்சத்தீவுகள், கேரளம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கும், தென்மேற்கு, மேற்கு மத்திய, கிழக்கு மத்திய மற்றும் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் மேலும் சில பகுதிகள், மேலும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் மீதமுள்ள பகுதிகளுக்கும் முன்னேறும் வகையில் நிலைமை சாதகமாக உள்ளது. அதனால் தமிழகம், கேரளத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 1) முதல் 6-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 2, 3 தேதிகளில் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நாளை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 4-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 7 செமீ, நாலுமுக்கில் 6 செமீ, காக்காச்சியில் 5 செமீ, திருச்சி மாவட்டம் தென்பரநாடு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT