தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி

 
தமிழகம்

தேனி சிறை சம்பவ நிலவரம்: எஞ்சிய கைதிகளை சுட்டுப் பிடிக்க தென்மண்டல ஐஜி உத்தரவு

என்.சன்னாசி

மதுரை: தேனி சிறையில் இருந்து தப்பிய எஞ்சிய இரு கைதிகளை சுட்டுப் பிடிக்க தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து கடந்த அக்.26-ம் தேதி அங்கிருந்த போலீஸாரை தாக்கி 17 பேர் தப்பியோடினர். இதில் முதற்கட்டமாக பிரவீன்குமார் என்பவர் சிறைக்கு அருகே பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், மாற்றுத்திறனாளி கைதியான பிரசாந்த் என்ற லிங்க பிரசாத் உட்பட மொத்தம் 5 பேர் நேற்று பிடிபட்டனர்.

பின்பு வனப்பகுதியில் மறைந்திருந்த கருப்பசாமி, தருண்குமார், பாண்டிச்செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக் ராஜா, சோலை முகிலேஸ்வரன் ஆகிய 8 பேர் ட்ரோன் தேடுதலில் சிக்கினர்.

மொத்தம் 13 பேர் சிக்கிய நிலையில், முதற்கட்டமாக பிடிபட்ட 5 கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேர் கானாவிலக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்முத்து, ரெஜின் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

மீதம் உள்ள திருப்பதி, மீனாட்சி சுந்தரம் (இருவரும் சகோதரர்கள்) ஆகியோர் தாங்கள் பதுக்கி இருந்த இடத்தை போலீஸார் நெருங்கியதை அறிந்ததும் மலையில் இருந்து வேறு பாதையில் மலையடிவாரத்துக்கு ஓடியுள்ளனர். பின்னர் அந்த வழியே பைக்கில் வந்தவரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த இரண்டு பேர் மட்டுமே இன்னமும் பிடிபடாமல் உள்ளதால் போலீஸார் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் தப்பியதால் தேனி மாவட்ட எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

கானாவிலக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தப்பியோடிய 2 கைதிகளையும் சுட்டுப் பிடிக்க தென்மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT