“தகனத்திலும் விளம்பரம் தேடும் அமைச்சர் நிர்மல் குமாரின் செயல் வெட்கக்கேடானது”- தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

Updated on: 
2 min read

சென்னை: “மின்தடையைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்காமல், தகனத்துக்கு மின்வாரியமே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்ததாகப் பொய்யான தகவலைப் பரப்புவதற்கு அமைச்சர் நிர்மல் குமாருக்கு வெட்கமாக இல்லையா?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மறைந்த தனது தந்தையின் உடலைத் தகனம் செய்ய முடியாமல் தவித்த மகன், மின்வாரியத்தின் அலட்சியத்தால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழலில், தனது சொந்தச் செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து தகனம் செய்ததாக வெளியிட்டுள்ள உருக்கமான காணொலி மனதை உலுக்குகிறது.

மின்தடை குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரியமும், சம்பந்தப்பட்ட அமைச்சரும், தாங்களே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்து இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்ததாகப் பொய்யான தகவலைச் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டிருப்பதைப் பாதிக்கப்பட்ட நபரே தனது காணொலி மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். மின் தடையைச் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காமல், மின்வாரியமே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்ததாகப் பொய்யான தகவலைப் பரப்புவதற்கு எரிசக்தித் துறை அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா? மக்களின் துயரத்திலும் உண்மையை மறைத்து விளம்பரம் தேடும் அமைச்சரின் செயல் அருவருக்கத்தக்கது.

தவெக ஆட்சி அமைந்தது முதலே, மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடங்கி, மின் கணக்கீட்டில் குளறுபடிகள், மறைமுக மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, குறிப்பாக, முதல்வரின் தொகுதியிலேயே மின்வெட்டால் பொதுமக்கள் போராட்டம், மின் கொள்முதலில் தடுமாற்றம் என, தனது திறனற்ற நிர்வாகத்தால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான எரிசக்தித் துறையைப் படுகுழியில் தள்ளிவிட்டு, விளம்பரம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு வெறும் வாய்ச் சவடால் பேசி வரும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமாரிடம், சட்டத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பல முக்கியத் துறைகளையும் ஒப்படைத்திருப்பது முதல்வரின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்குகிறது.

முக்கியத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய முதல்வர், அவற்றையெல்லாம் கவனிக்காமல், துறை சார்ந்த பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றாத அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, எதுவுமே நடக்காததைப் போல வேடிக்கை பார்ப்பது, தனது பொறுப்பிலிருந்து நழுவி, நிர்வாகச் சீர்கேடுகளுக்குத் துணைபோவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அமைச்சர்களைத் தொடர்ந்து முக்கியப் பொறுப்புகளில் வைத்திருப்பதன் மூலம், முதல்வர் யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர்.

எனவே, மக்களுக்கும் மாநிலத்திற்கும் எந்த வகையிலும் பயனளிக்காத வெட்டிப் பேச்சுகளுடன் வலம் வரும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார், இனியாவது தனது துறையின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, மின்தடையால் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் தொடங்கி தொழில் நிறுவனங்கள் வரை நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள எரிசக்தித் துறையில் முதல்வர் விஜய் நேரடிக் கவனம் செலுத்திட வேண்டும் எனவும் இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.” என்று தினகரன் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>டிடிவி தினகரன்</p></div>
போக்குவரத்துக் கழகங்கள் அவதி: வெற்றிப் பயண திட்ட நிதியை அரசு வழங்க அன்புமணி கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in