மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் விஜய்
கோவளம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டல முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை ஆக.20-ம் தேதி நடைபெறுகிறது.
நாட்டில் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான உறவைச் சுமூகமாக பேணும் விதமாக மத்திய அரசால் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி 31-வது தென் மண்டல முதல்வர்கள் மாநாடு, சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிஷர்மேன் கோவ் ஓட்டலில் நாளை ஆக.20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவைப் பலப்படுத்துவது, நீர்வளப் பகிர்வு, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தற்போது தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தச் சூழலில் மாநாட்டில் எம்.பி. தொகுதி மறுவரையறை விவகாரம் கூடுதல் கவனம் பெறும் என தெரிகிறது. மேலும், தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே சிக்கல் எழுந்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் போது தமிழக முதல்வர் விஜய் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் தனியாகச் சந்தித்து காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் விஜய் முதல்வரான பிறகு இதுவரை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. பதவி ஏற்ற பின்னர் டெல்லிக்கு முதல் முறையாகச் சென்ற போதும், அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், மாநாட்டில் அமித் ஷாவுடனான இந்த முதல் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும், தென் மாநிலங்களைப் பொறுத்த வரை ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் மட்டுமே பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதனால் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாநாடு நிறைவு பெற்ற பின் மாலையில் 2 மாநிலங்களின் முதல்வர்களும் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால், தற்போதைய சூழலில் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சிவகுமார் கேட்டுக் கொண்டார். அதனால் முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை முன்னிட்டு கோவளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பிஷர்மேன் கோவ் ஓட்டல் வளாகம், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் முக்கிய சந்திப்புகளில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விருந்தினர் தங்குமிடங்கள், போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புப் பாதுகாப்பு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், போக்குவரத்திலும் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று வருகை
மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 7 மணிக்குச் சென்னை வருகிறார். அதன்பின்னர் பழைய விமான நிலையத்தில் இருந்து, காரில் புறப்பட்டு கோவளம் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்குச் சென்று அங்கு இரவு தங்குகிறார். தொடர்ந்து மறுநாள் நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிற்பகல் 3.45 மணிக்குச் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
மேலும், மாநாட்டுக்கு முன்பாக இன்று இரவு 6 மாநிலங்களின் உயரதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறவுள்ளது.