தமிழகம்

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு

மு.வேல்சங்கர்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை (பிப்.4) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானியும், அதிகாரியுமான வி.ஆர்.துரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பிடிஒ-வில் 2 செ.மீ. கோயம்புத்தூர் மாவட்டம் உபாசி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து-வில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

          

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்.3) லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (பிப்.4) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

பிப்.5-ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிப்.6-ம் தேதி முதல் பிப்.9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை வானிலை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (பிப்.3) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி முதல் 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (பிப்.4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

SCROLL FOR NEXT