சென்னை: தமிழகத்தில் ஹ்வாஷின், சியோயான் ஆகிய தென்கொரிய வாகன உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,370 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைந்து வருவதாகவும், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சில நிறுவனங்கள் சென்று விட்ட தாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கி வரும் ஹ்வாஷின், சியோயான், ஐவாமெட் ஆகிய நிறுவனங்கள் தங்கள் புதிய உற்பத்தி முதலீடுகளைத் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு மாற்றுவதாகச் சமூக வலைதளங்களில் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
அதற்கு மாறாக ஹ்வாஷின், சியோயான் ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர்ந்து தொழில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதன்படி இதற்கான விருப்பக் கடிதங்களைத் தமிழக அரசிடம் நேற்று சமர்ப்பித்தன. அதன்படி இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்பட்டு வரும் ஹ்வாஷின் நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.850 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், சியோயான் நிறுவனம் 2031-ம் ஆண்டு வரை ரூ.520 கோடி முதலீடு செய்யவுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஹ்வாஷின் (Hwashin), சியோயான் (Seoyon) ஆகிய நிறுவனங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,370 கோடி புதிய முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இதன்மூலம் மாநிலத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை மீண்டும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதல்வர் விஜய் தலைமையில் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் ஏற்ற சூழலை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
அதேநேரம் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை வரவேற்கிறோம். இது இந்தியாவின் உற்பத்தித் திறனை மேலும் வலுப்படுத்தும். தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தை, இங்கு தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களே எடுத்துரைக்கின்றன. தொடர்ந்து முதலீடுகளைக் கொண்டு வருவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.