அமைச்சர் கீர்த்தனா
சிவகாசி: தென்கொரியாவில் சிவகாசி பட்டாசுகளை காட்சிப்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
சிவகாசியில் டான்பாமா அலுவலகத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் உடன் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை நடத்தினார். அப்போது பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள் சார்பில் பட்டாசு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஏற்றுமதிப் பொருட்களில் ஆரஞ்சு நிறப் பிரிவில் உள்ள பட்டாசை வெள்ளை அல்லது பச்சை நிற பிரிவுக்கு மாற்ற வேண்டும். அரசு ஆவணங்களில் பட்டாசுத் தொழிலை அருவருக்கத்தக்க இழிவானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்ற வேண்டும்.
ஜிஎஸ்டி வரி பகிர்வில் உள்ள குளறுபடிகளைக் களைய வேண்டும். சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து அமைச்சரிடம் மனு அளித்தனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது: சமீபத்தில் அரசுமுறைப் பயணமாக தென்கொரியா சென்றபோது பட்டாசு ஏற்றுமதி செய்வது தொடர்பாக அங்குள்ள தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினேன். தென்கொரியாவில் சிவகாசி பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதற்கான வாய்ப்பாக அங்குசிவகாசி பட்டாசுகளைக் காட்சிப்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
பட்டாசுத் தொழில் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்க குழு அமைக்கப்படும். விதிமீறல் காரணமாக உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். பட்டாசு ஆலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் திறக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். போலந்து நாட்டில் ஒரே ஒரு வாடிக்கையாளர் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு சிவகாசி பட்டாசுகளை இறக்குமதி செய்யத் தயாராக உள்ளார். சீனாவுக்கு நிகராக சிவகாசி பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான கொள்கை முடிவு உருவாக்கி சிவகாசியை வளர்ச்சி அடையச் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.