கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின் வாரியம் சூரிய ஒளி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாக மின் உற்பத்தி செய்ய முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது சூரிய ஒளி மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 12,352 மெகாவாட்டாகவும், காற்றாலைகளின் திறன் 10 ஆயிரம் மெகாவாட்டாகவும் உள்ளது.
தமிழகத்தின் மின் தேவை தினமும் சராசரியாக 350 மில்லியன் யூனிட்கள் என்ற அளவில் இருக்கும். ஆனால் கோடை காலங்களில் அதிகரித்து காணப்படும். முன்னதாக தமிழகத்தின் அதிகபட்ச மின் நுகர்வு என்பது கடந்த 2024-ம் ஆண்டு ஏப்.30-ம் தேதி 454 மில்லியன் யூனிட்களாக பதிவானது. இந்த ஆண்டு கோடைகாலம் மற்றும் தேர்தல் நடைபெறவுள்ளதால் மின் நுகர்வு உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து மின் நுகர்வு அதிகரித்தாலும், சூரிய சக்தி மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வெயில் காலம் தொடங்கியது முதல் வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் குளிர்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
வெயில் அதிகரித்ததால் சூரிய ஒளி மின் உற்பத்தி கடந்த மார்ச் 24-ம் தேதி 54.8 மில்லியன் யூனிட், 27-ம் தேதி 55.6 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி 53.9 மில்லியன் யூனிட்கள் உற்பத்தியே அதிகபட்சமாக இருந்தது. சூரிய சக்தி மின்சாரம் மாநிலத்தின் தற்போதைய மின் தேவையில் 13 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இது வணிக மற்றும் வீட்டுபயன்பாட்டுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கி உதவுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு சூரிய சக்தி உற்பத்தி திறன் 5 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த நிலையில் தற்போது 12 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில்சூரிய சக்தி வாயிலாக 1,745 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டுகூடுதலாக 40 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.