தூங்கா நகரான மதுரையில் இரவிலும் மாட்டுத்தாவணி சாலையில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

 

படம்: நா.தங்கரத்தினம்

தமிழகம்

மதுரை மெட்ரோ நிராகரிப்பு பின்னணியில் அரசியலா, அலட்சியமா?

கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ரூ.11,360 கோடி மதிப்பிலான மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துள்ள மத்திய அரசு, அதற்கு பதிலாக பரிந்துரை செய்துள்ள ‘பஸ் விரைவுப் போக்குவரத்து அமைப்பு’ திட்டத்தை மதுரை யில் ஒருபோதும் நிறைவேற்ற சாத்தியமே இல்லை என்று கூறப்படுகிறது.

‘மெட்ரோ’ நிராகரிப்பு பின்னணியில் ஒளிந்திருப்பது, மத்திய அரசின் அரசியலா? தமிழக அரசின் அலட்சியமா? என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை 3-வது முறையாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இதற்கு மதுரை மக்கள் பிரதிநிதிகள் முதல் தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் வரை, பாஜக ஆளும் மாநிலங்களில் சிறிய 2-ம் நிலை மாநகரங்களுக்குக்கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கி திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை திட்டமிட்டு மத்திய அரசு புறக்கணிக்கிறது, என்று கொந்தளித்துள்ளனர்.

ஆனால் விவரம் அறிந்தவர்கள், இந்த விவகாரத்தில் மத்திய அரசை மட்டுமே குற்றம் சாட்டிவிட முடியாது, மதுரைக்கான விரிவான போக்குவரத்துத் திட்டம் தயாரிப்பில் தமிழக அரசு, மத்திய அரசு எதிர்பார்க்கும் விவரங்களை உள்ளடக்கி முறையாக அறிக்கை தயார் செய்யவில்லை என்றும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கொடுத்த முக்கியத்து வத்தை தமிழக அரசு, மதுரை, கோவை நகரங்களுக்கு கொடுக்காமல் அலட்சியமாகவும், கவனக் குறைவாகவும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பதிலாக ‘பஸ் விரைவுப் போக்குவரத்து அமைப்பை’ (Bus Rapid Transit System, BRTS) செயல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதற்கு விசாலமான சாலை இருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே மிகக் குறுகிய சாலைகளும், நெருக்கடியான பேருந்து போக்குவரத்தையும் கொண்டுள்ள பழமையான மதுரை மாநகரின் கட்ட மைப்பு, பிஆர்டிஎஸ் செயல்படுத்த சாத்தியமற்றது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரை உள் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு சங்கம் (MID) ஆலோசகர் மகேந்திரவர்மன் கூறியதாவது: மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் மட்டுமல்லாது, மாநகர் பகுதியில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு திட்டத்திலும் 19 முதல் 20 லட்சம் மக்கள்தொகை என்றே குறிப்பிடப்படுகிறது.

அதனால், 2011-ம் ஆண்டு மக்கள்தொகையை குறிப்பிட்டு மத்திய அரசு, இந்த திட்டத்தை நிராகரித்து இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

மதுரை மாஸ்டர் பிளான் திட்டம், 1,255 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மதுரை மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் சுமார் 33.5 சதவீத மாகும்.

இத்திட்டத்தின் எல்கைக்குள் மதுரை மாநகராட்சி, 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 316 வருவாய் கிராமங்கள் வருகின்றன. மேலும், மெட்ரோ ரயில் திட்டம் திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரை திட்டமிடப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் மட்டுமே 1.25 லட்சம் மக்கள்தொகை உள்ளது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் உட்பட பல ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. மாநகர் பகுதிக்குள் வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி, சுற்றுலா போன்ற காரணங்களுக்காக தினமும் ஏராளமான உள்நாட்டு மக்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். சமீபத்தில் தமிழகத்தின் 2-வது சுற்றுலா நகரமாக மதுரை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரைச் சுற்றிலும் ஒத்தக்கடை, திருமோகூர், நாகமலை புதுக்கோட்டை, கடச்ச னேந்தல், கருப்பாயூரணி, கப்பலூர், திருமங்கலம், மண்டேலா நகர் போன்ற மாநகராட்சியுடன் இணைக் கப்பட வேண்டிய நகர் பகுதிகள் நிறைய உள்ளன.

மெட்ரோ ரயில், மின்சார ரயிலுக்கு தனிப்பாதை அமைப்பது போல் மதுரைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள பிஆர்டிஎஸ் திட்டத்துக்கும் பேருந்துகள் செல்வதற்கு தனியான பாதை வேண்டும். இந்தியாவில் அஹமதாபாத்தில் மட்டுமே பிஆர்டிஎஸ் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது.

டெல்லி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் இத்திட்டம் தோல்வி யடைந்துள்ளது. பிஆர்டிஎஸ் என்ற பஸ் விரைவுப் போக்குவரத்து திட்டத்துக்கு மதுரை மாநகர் பகுதியில் அகலமான சாலைகளே இல்லை.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நகர கட்டமைப்பு கொண்ட குறுகிய சாலைகளைக் கொண்ட மதுரை மாநகரில் சாலைகளை விரிவுபடுத்துவது சாத்தி யமே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை என்று கூறினார்.

மேலும் சென்னை, கோவை மாநகராட்சிகளைப் போல மதுரை மாநகராட்சியின் எல்லையை தேவைக்கேற்ப அவ்வப்போது விரிவாக்கம் செய்திருந்தாலே, மதுரை மாநகராட்சியின் வளர்ச் சிக்கு தடையாக உள்ள இந்த மக்கள் தொகை குறைவு, வருவாய் குறைவு போன்ற பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டிருக்காது என மதுரை மக்கள் கூறுகின்றனர்.

மக்கள்தொகை மட்டும்தான் பிரச்சினையா?

மக்கள்தொகை மட்டுமே மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பிரச்சினை என்றால், ஆக்ரா, இந்தூர், போபால் நகரங்களுக்கு எப்படி மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தது என்ற கேள்வி எழுகிறது. அந்நகரங்களை காட்டிலும் மதுரை நாட்டின் முக்கிய ஆன்மிக சுற்றுலா நகரமாக திகழ்கிறது.

திருமங்கலத்தில் தொடங்கும் மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும்போது எதிர்காலத்தில் கணிசமான பயணிகள் பயன்பாட்டை ஈர்க்கும். தற்போது மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கினாலும், முடிவடைவதற்கு 2030-க்கு மேல் ஆகிவிடும்.

அப்போது நகரமும், மக்கள்தொகையும் மிகவும் அதிகரித்துவிடும் என்பதையும் கணித்து திட்ட அறிக்கையை தமிழக அரசு தயார் செய்திருக்க வேண்டும். மத்திய அரசாவது இவ்விவரங்களை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

இதுதவிர இருசக்கர வாகனங்கள், கார், பேருந்துகளில் செல்லும் நேரத்தைவிட மெட்ரோ ரயிலால் பயண நேரம் குறையும் என்பதை மதிப்பிடுவதிலும் தமிழக அரசு குளறுபடிகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT