திருச்சி: தமிழகத்தில் காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்தல், எப்ஐஆர் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில்சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருளைப் பயன்படுத்த தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்று காவல் துறையினர் வலியுறுத்துகின்றனர்.
தமிழக காவல் துறையின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்காக சிசிடிஎன்எஸ் 2.0 (CCTNS- Crime and Criminal Tracking Network & Systems) என்கிற புதிய மென்பொருள் கடந்த பிப்.26-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த மென்பொருளை கொண்டே பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, புகார்கள் பதிவு செய்யப்பட்டதற்கு அத்தாட்சியாக சிஎஸ்ஆர் நகல் அல்லது எப்ஐஆர் நகல் வழங்கப்படுகிறது.
இந்தத் தளம் தேசிய அளவிலான குற்றவியல் நீதி அமைப்புடன் (ICJS) இணைக்கப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவை மூலம் புகார் அளித்தவர்கள் தங்களது புகாரின் நிலையை ஆன்லைனில் அறிந்து கொள்ளலாம்.
இவை மட்டுமின்றி காவல் நிலையங்களுக்குச் செல்லாமலேயே ஆன்லைன் மூலம் காவல் சரிபார்ப்பு சேவை (Police Verification), வேலைவாய்ப்பு, வாடகைதாரர் சரிபார்ப்பு அல்லது வீட்டுப் பணியாளர் சரிபார்ப்புக்கான சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.
காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்த விவரங்களைத் தேடலாம். ஆனால் இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் நடைமுறையில் நேரிடும் இடையூறுகளால் காலம் விரயமாவதாக போலீஸார் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருச்சி மாநகர காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: யானை வாங்கியாச்சு, அங்குசம் வாங்க காசு இல்லையாம் என்ற பழமொழிக்கேற்ப, மிகச்சிறந்த மென்பொருளை கொடுத்துவிட்டு, அதற்குரிய தரமான இணையதள சேவை இல்லை. இதனால் ஒரு எப்ஐஆர் பதிவு செய்ய குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆகிறது.
ஒவ்வொரு முறையும் விசாரணை அதிகாரியின் (ஐ.ஓ.) ஒப்புதலுக்காக ஓடிபி அனுப்பப்படுகிறது. அவரது ஒப்புதல் பெற்ற பிறகே அடுத்தடுத்த பதிவுகளை ஏற்றமுடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடைமுறை இருந்தாலும், இதுவும் கால தாமதம் ஏற்பட காரணமாக உள்ளது. மேலும் புகார் அளிப்பவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
காவல் துறையினரிடம் சிக்கும் குற்றவாளிகளின் பழைய குற்ற வழக்குகளைத் தேடுவதற்கு அவரது பெயர், தந்தை பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்தாலே முழு விவரங்கள் கிடைத்து வந்த நிலையில், தற்போது சம்பந்தப்பட்டவரின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை கொடுத்தால் மட்டுமே விவரங்கள் கிடைக்கின்றன.
இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதில் உள்ள இதுபோன்ற பின்னடைவுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம்விரிவாக எடுத்துரைத்துள்ளோம். தமிழக காவல் துறை இயக்குநரும், தமிழக முதல் வரும் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருளை திறம்பட இயக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் விரைவாக செய்து தர வேண்டும் என்றனர்.