

முன்னாள் முதல்வர் பனகல் அரசர்
சென்னை: சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பனகல் அரசரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதல்வர் பனகல் அரசரின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நீதிக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார், முன்னெடுத்த சுய மரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன.
கல்வி வளர்ச்சிக்கான அவரது அக்கறை, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வை ஆகியவை இன்றும் வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்கின்றன. பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: “தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்” எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று. பனகல் அரசர் குறித்த புத்தகமே கருணாநிதியின் அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
சமூக நீதியின் அடித்தளமான வகுப்பு வாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக் காலத்தில் அவர் செய்த சாதனைகள் தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை. நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.