சென்னை: "ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஒரே மாதத்திற்குள்ளேயே, தமிழகம் இன்றைக்கு அதலபாதாளத்திற்குப் போகும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குப் சென்று கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். நாம் அதற்கு நூறு சதவீதம் தயாராக இருக்க வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்று (28-06-2026) சென்னை, வானகரத்தில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பென்ஜமின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாற்றுக் கட்சியினர் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களைத் தி.மு.க.-வில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம்: எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து, பவள விழா கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். எம்.ஜி.ஆர். இருந்த கழகத்திற்கு வந்திருக்கிறீர்கள். அதுமட்டுமா, அவர் பொருளாளராக இருந்து செயல்பட்ட இயக்கத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் அவர் முதன்முதலில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.
தனிக்கட்சி கண்ட பிறகும், கருணாநிதியை சட்டப்பேரவையில் ஒருவர் பேரைக் குறிப்பிட்டுப் பேசியபோது, அன்றைக்கு சட்டப்பேரவையில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், அதைக் கண்டித்தார். என்ன சொல்லிக் கண்டித்தார் தெரியுமா, “உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம்; ஆனால் எனக்குத் தலைவர் கலைஞர்தான்” என்று சொல்லி, அந்த வார்த்தையை வாபஸ் வாங்கச் சொன்னார். இது வரலாறு.
முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அ.தி.மு.க.வில் இணைந்து பல ஆண்டுகள் உண்மையாக உழைத்தவர். வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளராக, சென்னை 145-ஆவது வார்டின் மாமன்ற உறுப்பினராக, மாநகராட்சியின் துணை மேயராகப் படிப்படியாக உயர்ந்து, சென்னை மாநகரம் முழுவதும் அறிமுகமானவர். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் வென்று, ஊரகத் தொழில் துறை அமைச்சராக செயல்பட்டிருக்கிறார்.
அவர் அமைச்சராக இருந்தபோது, நான் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தேன். நாங்கள் கேள்விகள் கேட்கிற நேரத்தில், பல அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பென்ஜமின் பதில் சொல்கிறார் என்று சொன்னால், நாங்கள் கொஞ்சம் உஷாராக இருப்போம். ஏன் என்றால், புள்ளி விவரத்தோடு, ஆதாரங்களோடு எதையும் ஆணித்தரமாக அழுத்தமாக எடுத்துச் சொல்லக் கூடியவர். அந்த இளைஞர் சட்டமன்றத்தில் அமைச்சராக இருந்து பதில் சொல்வதை நாங்கள் ரசித்ததுண்டு.
பொதுவாக, ஒரு தேர்தல் முடிந்தவுடன், வெற்றி பெற்ற இயக்கத்தை நோக்கி நிறைய பேர் சேர்வார்கள். எதிர்க்கட்சியில் இருந்து விலகி, ஆளுங்கட்சிக்குத்தான் நிறைய பேர் சென்று சேர்வார்கள். ஆனால் இங்கு என்ன என்றால், எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பதவிக்காக அல்ல; பவுசுக்காக அல்ல; பொறுப்புக்காக அல்ல; நீங்கள் எல்லாம் "கொள்கைதான் முக்கியம்" என்ற உணர்வோடு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அதுதான் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம்.
திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக இருந்தால்தான், தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று நம்பி இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக, எந்தத் துறையை எடுத்தாலும், இதுவரை தமிழ்நாடு கண்டிராத வளர்ச்சியை, நம்முடைய தமிழ்நாடு பார்த்தது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாட்டை நாம் உயர்த்தினோம். 'தினமும் ஒரு திட்டம்' என்று சொல்லத்தக்க வகையில் திட்டங்களை உருவாக்கினோம். அனைத்துத் தரப்பு மக்களையும் நாம் கவரும் வகையில் திட்டங்கள் தீட்டினோம். திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்தன.
நமது ஆட்சியின் மீது இருந்த நம்பிக்கையால்தான், தமிழ்நாட்டை நோக்கிப் பல்வேறு மாநிலங்களிலிருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்தன; தொழில் தொடங்கினார்கள். அதுமட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புகள் பெருகின. அண்டை மாநிலங்களில் ஆட்சி செய்யும், அரசியல் ரீதியாக நமக்கு எதிரணியில் இருக்கும் தலைவர்கள் கூட இதனை வெளிப்படையாகப் பாராட்டினார்கள்; சில பேர் பொறாமைப் பட்டார்கள்.
ஆனால், இப்போது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஒரே மாதத்திற்குள், தமிழ்நாடு இன்றைக்கு அதலபாதாளத்திற்குப் போகும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்களை நடத்துவோர் இந்த புதிய ஆட்சியை நம்பித் தமிழ்நாட்டுக்கு வர பயப்படுகிறார்கள், தயங்குகிறார்கள்; அதனால், வேறு மாநிலங்களுக்குப் சென்று கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம், சட்டம்-ஒழுங்கைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பாலியல் கொடுமைகள், போதை மருந்து நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டுகள், கொள்ளைகள் மற்றும் அராஜகங்கள். டி.வி.யை பார்த்தாலே, பேப்பரைப் படித்தாலே இந்தச் செய்திகள்தான் நம் கண்களில் படுகின்றன. அதிலும் குறிப்பாக, நிறைய குற்றங்களில் ஆளுங்கட்சிக்காரர்களே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் வேதனை.
இன்னொரு பக்கத்தில், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் எனப் பல்வேறு பிரச்சினைகள். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், “டேக் டைவர்ஷன்” என்று திசைதிருப்பும் வேலைகளில்தான் இந்த ஆட்சியாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த டெக்னிக் மக்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது. இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தவறு செய்துவிட்டோம். வாக்களித்தவர்களும் கஷ்டப்படுகிறார்கள்; வாக்களிக்காதவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களே தன்னெழுச்சியாகப் பல இடங்களில் இப்போது போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைக்கு அமைச்சர்கள் எங்காவது காரில் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது, வழிமறித்துக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்தச் சூழலில், மக்களுக்குத் துணையாக நாம்தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டைக் காக்கும் பொறுப்பும் கடமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் அதிகமாக இருக்கிறது. ஏன் என்றால், நாம் பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை, சீரழிய விடக் கூடாது.
ஒரு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழப்பது என்பது, ஏதோ பெரிய வீழ்ச்சி அல்ல. எத்தனையோ வெற்றியைப் பார்த்திருக்கிறோம்; எத்தனையோ தோல்வியையும் பார்த்திருக்கிறோம். தி.மு.க.வைப் போன்று, வெற்றி பெற்ற கட்சியும் கிடையாது; தோல்வி அடைந்த கட்சியும் கிடையாது.
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; விரைவில் வரலாம்; மூன்று மாதங்கள் கழித்து வரலாம்; ஆறு மாதங்கள் கழித்து வரலாம்; ஏன் என்றால், இப்போது நடைபெறும் ஆட்சி என்பது, மெஜாரிட்டியோடு அவர்கள் வெற்றி பெறவில்லை. மெஜாரிட்டி என்றால் என்ன? 118-ஆவது வர வேண்டும். அவர்கள் வெற்றி பெற்றது 108 தான். தி.மு.க.தான் வெற்றி பெற வேண்டும்; ஸ்டாலின்தான் முதல்வராக வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தீர்கள் அல்லவா... நம்முடன் இருந்த அந்தக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் இன்றைக்கு இந்த வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
அவ்வாறு ஓடும் வண்டி, எங்கே சென்று நிற்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், எப்போது எது நடந்தாலும் நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்; எந்தச் சூழ்நிலையிலும் வரலாம். நாம் அதற்கு நூறு சதவீதம் தயாராக இருக்க வேண்டும்.
எனவே, கழகத்தின் வெற்றிக்கு இந்த நிமிடத்திலிருந்தே உழைக்கத் தொடங்குவோம், பாடுபடுவோம், பணியாற்றுவோம் என்ற உறுதி எடுக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். உண்மையாக உழையுங்கள்; உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் உங்களைத் தேடி வரும். எனத் தெரிவித்தார்.