தமிழகம்

மதிமுகவா, திமுகவா? - மழுப்பிய சீர்காழி எம்எல்ஏ

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மதிமுகவில் நீடிக்கிறீர்களா? திமுகவில் இணைந்து விட்டீர்களா? என்ற கேள்விக்கு சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் நேரடியாக பதிலளிக்காமல் சமாளித்துவிட்டுச் சென்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியில், மதிமுக சார்பில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட செந்தில்செல்வன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றார்.

தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியபோது, அதற்கு செந்தில்செல்வன் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் கூட்டத்திலும், அவர் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்திப்பதையும், செல்போனில் பேசுவதையும் தவிர்த்துவந்த செந்தில் செல்வன், மயிலாடுதுறையில் வேளாண்மைத் துறை சார்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்தார்.

மதிமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த அவரிடம், “நீங்கள் மதிமுகவில் தொடர்கிறீர்களா? அல்லது திமுகவில் இணைந்து விட்டீர்களா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நேரடியாக பதில் கூறாத எம்எல்ஏ செந்தில்செல்வன், “நான் எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணி செய்து வருகிறேன். மக்களுக்கு தொடர்ந்து கடமை ஆற்றுவேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT