புதுக்கோட்டை: 2026 பேரவைத் தேர்தலில் போட்டியிட, திமுக கூட்டணியில் ஏற்கெனவே வெற்றி பெற்ற கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. கூட்டத்துக்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை வகித்தார்.
தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
இதனால் அவருக்கு பாஜக மாநிலத் தலைவர், இந்து மக்கள் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். காவல் துறையிலும் புகார் அளித்துள்ளனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். மிரட்டல் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.பி. வெங்கடேசனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
புயல் மழையால் பாதி்க்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம் போதாது. இதை ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்காமல், மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்.
கந்தர்வக்கோட்டை தொகுதி பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை தொடங்குவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
மாநிலம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்வோர், குடியிருப்போர், கடை நடத்துவோருக்கு, குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்து, அந்த இடத்தை முழுமையாகக் கொடுத்துவிட வேண்டும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த முறை வெற்றி பெற்றுள்ள கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை தொகுதிகள் உட்பட, போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியல் தயார் செய்துள்ளோம்.
அதில் சில தொகுதிகளை கூட்டணி கட்சியினரும் கேட்கக் கூடும் என்பதால், அந்த விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது. தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இன்னும் குழு அமைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.