மதுரை கோ. புதூர் மாநகராட்சி நீரேற்று நிலையத்தின் பாதாளச் சாக்கடை இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதால், டி.ஆர்.ஓ. காலனி அருகே மருதுபாண்டியர் 2-வது தெருவில் சாலையில் பொங்கி ஓடும் கழிவுநீர். | படங்கள்: நா.தங்கரத்தினம் |

 
தமிழகம்

மதுரையில் திரும்பிய பக்கம் எல்லாம் பீறிட்டு பொங்கும் கழிவுநீர்!

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் உடைந்தும், சாலைகளில் குழிகள் ஏற்பட்டும் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் வாழ முடியாமல் தவிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சி, நகராட்சியாக இருந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக வைகை ஆற்றின் மாநகர தெற்குப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் வைகை ஆற்றின் வடக்கே உள்ள வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த இரண்டு பாதாள சாக்கடை கட்டமைப்புகளும் முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது முற்றிலும் சிதைந்துபோய், அனைத்து வார்டுகளிலும் மழைக்காலம் மட்டுமில்லாது சாதாரண வெயில் காலத்திலும்கூட பாதாள சாக்கடை குழாய் உடைந்தும், கழிவுநீர் பொங்கியும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக 10, 12, 14, 15 ஆகிய நான்கு வார்டுகளில் கடந்த 6 மாதங்களில் 4-வது முறையாக கழிவுநீர் குழாய் உடைந்து கழிவுநீர் பீறிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது.

கோ.புதூர் கற்பக நகர் 3-வது தெருவில் உள்ள மாநகராட்சி நீரேற்று நிலையம் முன் பாதாள சாக்கடை இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதால் திடீரென சாலை உள்வாங்கி ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம்.

கோ.புதூர் கற்பக நகர் 3-வது தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி கழிவுநீரேற்று நிலையம் முன், அழுத்தம் அதிகரித்து பாதாள சாக்கடை குழாய் வெடித்ததால், சாலை உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதனால், தற்போது இந்த கழிவுநீரேற்று நிலையத்துக்கு வரக்கூடிய கழிவுநீர் குழாய்களை தற்காலிகமாக அடைத்து வைத்து மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

அதனால், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் மேன் ஹோல்கள் பொங்கி கழிவுநீர் தெப்பம்போல் தேங்கி உள்ளது. அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் திமுக மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி கூறுகையில், 10, 12, 14, 15 ஆகிய வார்டுகளின் கழிவுநீர் ஒட்டுமொத்தமாக கற்பக நகர் பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்கிறது.

சர்வயேர் காலனி சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பொங்கிச் செல்லும் பாதாள சாக்கடை கழிவுநீர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், சர்வேயர் காலனி சம்பகுளம் பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளின் பாதாள சாக்கடை கழிவுநீர்க் குழாயை, நேரடியாக கற்பக நகர் பம்பிங் ஸ்டேஷனில் இணைக்காமல் அதற்கு முன்பே பழைய கழிவுநீர் குழாயிலேயே புதிய பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் குழாயையும் இணைத்து விட்டனர்.

இதனால் கடந்த 6 மாதங்களில் தற்போது 4-வது முறையாக குழாய் வெடித்து கழிவுநீர் பீறிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் கற்பக நகர் பகுதியில் சாலையே கீழே இறங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டு விட்டது.

இதனை சரிசெய்வதற்கு குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகிவிடும். ஆணையரிடமும், பொறியியல் பிரிவு அதிகாரிகளிடமும் இப்பிரச்சினையை விளக்கி சொல்லி விட்டோம். ஆனால், அவர்கள் உடைப்பு ஏற்பட்ட பிறகே தற்காலிகமாக பராமரிப்பு பணி செய்கின்றனர், என்றனர்.

மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பழைய 72 வார்டுகளில் ஒட்டுமொத்த பாதாள சாக்கடை கட்டமைப்பும் மாற்றப்பட உள்ளது. அதுவரை மக்கள் பாதி்க்காதவாறு பிரச்சினைகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது, என்றனர்.

கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை

கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் தவெக-வுக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லாத நிலையில், வார்டுகளில் ஏற்படும் பிரச்சினைகளால் மக்களுடைய கோபம் தற்போது உள்ள திமுக, அதிமுக மற்றும் பிற கட்சி கவுன்சிலர்கள் மீது திரும்பும் என தவெக எம்எல்ஏ-க்கள் நினைக்கின்றனர்.

அவர்கள் தூண்டுதலின்படியே அதிகாரிகள் தற்போது கவுன்சிலர்கள் சொல்லக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்லை. காது கொடுத்தும் கேட்பதில்லை. இப்படியே கவுன்சிலர்கள் கெட்ட பெயர் வாங்கினால், வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் தவெக சார்பில் நிறுத்தக் கூடியவர்கள்தான் கவுன்சிலராக வெற்றிபெறுவார்கள்.

அப்படியிருக்கும்போது எதற்கு தற்போது உள்ள சிட்டிங் கவுன்சிலர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அதிகாரிகள் தப்புக் கணக்கு போடுகின்றனர். ஆனால், மக்களுக்கு யார் அரசியல் செய்கிறார்கள் என்று புரிந்து விட்டது. இதற்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள், என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT