ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உறைபனிப் பொழிவு தொடங்கியுள்ளதால், கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதியடைந்துள்ளனர்.
ஊட்டியில் கடந்த சில தினங்களாக நீர்ப்பனி பெய்த நிலையில், நேற்று முதல் உறைபனிப் பொழிவு தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவியது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 13.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.
புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், மைதானங்கள் மற்றும் வாகனங்களின் மீது உறைபனி படர்ந்து, அவை வெண்மையாகக் காட்சியளித்தன. கடும் குளிர் காரணமாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
இனி வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறைந்து, உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.