இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்.
நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மயிலாடுதுறை, சீர்காழி மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை படகுத் துறையில் வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் முதல் ஜனவரி வரை வெளியூர் மீன்வர்கள் தங்கி, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில், இங்கு தங்கியிருந்த மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள்பேட்டையைச் சேர்ந்த க.தேவராஜ், பு.தர், சீர்காழி அடுத்த புதுக்குப்பம் ர.சரண்ராஜ், ந.கலைவாணன் ஆகியோர் நேற்று முன்தினம் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதேபோல, மற்றொரு படகில் சீர்காழியை அடுத்த வானகிரியை சேர்ந்த வ.ராஜேஷ், ரெ.சத்தியா, ச.தனிவேல் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் 7 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி அனைவரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களது 2 படகுகள் மற்றும் உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கையில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரும், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
90 மீனவர்கள்... மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்வது மிகுந்த கவலையளிக்கிறது. தற்போது இலங்கை சிறையில் 90 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 254 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர் கைது நடவடிக்கைகள் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாலும், படகுகளை ஒப்படைக்காததாலும் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்கவும், கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.