தமிழகம்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து தனித் தீர்மானம்: திமுக ஆதரவுடன் பேரவையில் நிறைவேற்றம்

அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் ஆதரிக்கவில்லை

செய்திப்பிரிவு

சென்னை: தொகுதி மறு​வரையறையை எதிர்த்து பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனி தீர்​மானம் திமுக ஆதரவுடன் நிறை​வேற்​றப்​பட்​டது.

தமிழக சட்​டப்​பேர​வை நேற்று காலை கூடியதும் தொகுதி மறு​வரையறையை எதிர்த்​து, தனி தீர்​மானத்தை முதல்​வர் விஜய் நேற்று கொண்டு வந்​தார். அதில் கூறி​யிருப்​ப​தாவது:

தமி​ழ​கம் உள்​ளிட்ட அனைத்து மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் மக்​களவை, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை கடந்த 50 ஆண்​டு​களாக 1971-ம் ஆண்டு மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புப் புள்​ளி​ விவரங்​களின்​படி நிர்ணயிக்கப்பட்​டது. அதன் அடிப்​படை​யிலேயே தேர்​தல்​கள் நடத்​தப்​பட்டு வருகின்​றன.

ஆனால், கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறு​வரையறைத் தடையை நீக்​க​வும், 2011-ம் ஆண்டு மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு அடிப்​படை​யில் தொகுதி மறு​வரையறை செய்​ய​வும், மக்​களவை எம்​.பி.க்​களின் எண்​ணிக்​கையை 550-ல் இருந்து 850 ஆக அதி​கரிக்​க​வும் கடந்த ஏப்​ரல் மாதம் மக்​களவை​யில் கொண்​டு​வரப்​பட்ட அரசி​யலமைப்​புச் சட்ட திருத்த மசோதா தோல்வி அடைந்​தது.

இந்​நிலை​யில், மீண்​டும் மேற்​குறிப்​பிட்ட அரசி​யலமைப்​புச் சட்ட திருத்த மசோதா கொண்​டு​வரப்​பட​வுள்​ளது. அதன்​படி, 1971-க்​குப் பிறகு உள்ள எந்த மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்பை அடிப்​படை​யாகக் கொண்டு தொகுதி மறு​வரையறை செய்​தா​லும் மக்​கள்​தொகை​யைச் சிறப்​பாகக் கட்​டுப்​படுத்​திய தமி​ழ​கம் உள்​ளிட்ட தென் மாநிலங்​களில் எம்​.பி.க்​களின் பிர​தி​நி​தித்​து​வம் நிரந்​தர​மாகப் பாதிக்​கப்​படும்.

எனவே, மக்​களவை​யின் மொத்த உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கையை 543 என்ற நிலை​யிலேயே நிரந்​தர​மாக்க வேண்​டும். வரவிருக்​கும் மக்​களவைப் பொதுத் தேர்​தலிலும், அதன் பிறகு நடை​பெறும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களி​லும் 3-ல் ஒரு பங்கு தொகுதி ஒதுக்​கீட்​டுப் பலனைப் பெண்​கள் பெறு​வதை உறுதி செய்ய வேண்​டும் என மத்​திய அரசை தமிழக சட்​டப்​பேரவை ஒரு​மன​தாக வலி​யுறுத்​துகிறது. இவ்​வாறு தீர்​மானத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

இத்​தீர்​மானம் குறித்து முதல்​வர் விஜய் பேசியதாவது: பெண்​களுக்கு அரசி​யலில் உரிய இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும். இது சலுகை அல்ல, அவர்​களின் ஜனநாயக உரிமை. எனவே, மகளிருக்​கான தொகுதி ஒதுக்​கீட்டை மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்பு மற்​றும் தொகுதி மறு​வரையறை​யுடன் இணைத்து அதை ஒத்திவைக்​கக் கூடாது.

தற்​போது உள்ள 543 மக்​கள​வைத் தொகு​தி​களின் அடிப்​படை​யிலேயே மூன்​றில் ஒரு பங்கு தொகு​தி​களை மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​து, 2029-ம் ஆண்டு நடை​பெறவுள்ள மக்​கள​வைத் தேர்​தலிலேயே நடை​முறைப்​படுத்த வேண்​டும் என்று கூட்​டத்​தில் தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது. அதன் அடிப்​படை​யிலேயே இத்​தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு முதல்​வர் விஜய் பேசி​னார்.

பின்னர் ​தீர்​மானம் குறித்து பல்​வேறு கட்சி எம்​எல்​ஏக்​கள் பேசினர். அதன் விவரம்:

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி: தொகுதி மறு​வரையறை​யின் பாதிப்பை முதலில், இந்​தி​யா​வுக்கே கூறிய​வர் அன்​றைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். தமி​ழ​கம் பாதிக்​கக் கூடாது என்று திமுக ஆட்​சி​யிலேயே தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டது. இது தொடர்​பாக 7 மாநில முதல்​வர்​களுக்​குக் கடிதம் எழு​தி​னார் ஸ்டா​லின். ஏப்​ரல் 16-ல் மசோதா நகலை எரித்​து, எங்​கள் எதிர்ப்​பைக் காட்​டினோம். மக்​களவை​யில் மசோதா தோற்​கடிக்​கப்​படக் காரணம் திமுக​தான்.

33 சதவீத மகளிர் இட ஒதுக்​கீட்டை திமுக முழு​மை​யாக வரவேற்​கிறது. கடந்த 1971 மக்​கள்​தொகை அடிப்​படை​யிலேயே தொகுதி மறு​வரையறை செய்​யப்பட வேண்​டும். அதேவேளை​யில் மக்​களவை​யில் தமிழக எம்​.பி.க்​கள் பிர​தி​நி​தித்​து​வம் 7.18 என்ற சதவீதத்​தைக் குறைக்க அனு​ம​திக்​கக் கூடாது. ஆகவே தொகுதி மறு​வரையறையை எதிர்த்து அரசு கொண்டு வந்த தனித் தீர்​மானத்தை ஆதரிக்​கி​றோம்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா: தொகுதி மறு​வரையறை மசோ​தாவை திமுக எதிர்த்​ததற்கு நன்​றி. அனை​வ​ரும் அரசி​யலுக்கு அப்​பாற்​பட்டு சிந்​தித்து தீர்​மானத்தை ஆதரிக்க வேண்​டும். தொகுதி மறு​வரையறை மசோதா எப்​போது வந்​தா​லும், தமிழக எம்​.பி.க்​கள் 39 பேரும் வெளிநடப்பு செய்​யாமல் எதிர்த்து வாக்​களிக்க வேண்​டும்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி, தேமு​திக எம்​எல்ஏ பிரேமலதா விஜய​காந்த் ஆகியோர் பேசுகையில், தொகுதி மறு​வரையறை மசோ​தாவை இது​வரை மத்​திய அரசு கொண்டு வரவில்​லை. கொண்டு வந்த பிறகே விவா​திக்க வேண்​டும் என்று வலியுறுத்தினர்.

எம்​.​போஜ​ராஜன் (பாஜக): தொகுதி மறு​வரையறை மசோதா பரிசீலனை​யில்​தான் உள்​ளது. அதற்​குள் அவசர​மாக இத்​தீர்​மானம் கொண்டு வரு​வது ஏன் என்று புரிய​வில்​லை. எதிர்​கால தேவை கரு​தியே அதிக இருக்​கை​களு​டன் புதிய நாடாளு​மன்​றம் கட்​டப்​பட்​டது. இது அடுத்த தேர்​தலுக்​காக அல்ல. அடுத்த தலை​முறைக்​காக அமைக்​கப்​பட்​டது. இத்​தீர்​மானத்தை எதிர்க்​கிறேன். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்​கீடு அவசி​யம்.

பாமக எம்​எல்ஏ அ.கணேஷ்கு​மார்: தொகுதி மறு​வரையறை மசோதா அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிட​வில்​லை. செவி வழி செய்தி அடிப்​படை​யில் இத்​தீர்​மானம் கொண்டு வரப்பட்​டுள்​ளது. இதை திரும்​பப் பெற வேண்​டும். இவ்​வாறு எம்​எல்​ஏக்​கள் கருத்​துகளைத் தெரி​வித்த பின்​னர் குரல் வாக்​கு​கெடுப்பு மூலம் தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டது.

இத்​தீர்​மானத்தை தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், தி.க. தலை​வர் கி.வீரமணி, தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன் ஆகி​யோர் வரவேற்​றுள்​ளனர். தமி​ழ​கப் பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் எதிர்​த்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT