செந்தில் பாலாஜி, அசோக் குமார் |கோப்புப் படம்
கரூர்: கரூரில் வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கரூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வி.செந்தில்பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற தாகக்கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக, 2023 மே 26-ம் தேதி அவரது சகோதரர் அசோக்குமாருக்கு தொடர்புடைய கரூர் ராமகிருஷ்ணபுரம் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றனர்.
அப்போது அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, அவர்கள் வந்த வாகனத்தை சேதப்படுத்தியதுடன், பெண் அதிகாரி ஒருவரை முற்றுகையிட்டு தாக்கியதாகக் கூறி கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக போலீஸார் அண்மையில் அசோக்குமாரை தேடி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். இதையடுத்து, அசோக்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் முன்ஜாமீன் பெற்றனர்.
இதனிடையே முன்ஜாமீன் நிபந்தனையின்படி கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்னிலையில் நேற்று ஆஜரான அசோக்குமார், பிணை உத்தரவாதம் அளித்துவிட்டு திரும்பினார். அவருடன் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கரூர் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் எஸ்.பி.கனகராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.