சென்னை: கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள்தான் தவெக வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்று முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நலிவடைந்த மின் துறையை மேம்படுத்தி சீரான மின்விநியோகத்தை வழங்கியவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆண்டுதோறும் அதிகரித்தாலும் கூட கோடைகாலத்திலும் எந்த தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் வருவாய் ரூ.4 லட்சத்து 97,996 கோடி யாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ.5 லட்சத்து 32,443 கோடி செலவினமாகும்.
அதன்படி, வருவாய்க்கும், செலவுக்கும் இருக்கும் இடைவெளி ரூ.34,447 கோடி. அதிகபட்சம் மின் துறையின் கடன் வட்டித் தொகை 9.5 சதவீதத்துக்குள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி சேமிக்கப்பட்டது. மேலும், 25,000 மில்லியன் யூனிட் மின் தேவை கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. இதற்கேற்ப உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும் என்பதால் அதற்கான செலவினமும் அதிகரித்துள்ளது.
இதை வெள்ளை அறிக்கையில் வெளியிட்டிருந் தால் சிறப்பாக இருந்திருக்கும். மின்துறையில் செலவிடப்பட்ட செலவினங்களை அமைச்சர் சொல்லாமல் மறைத்துள்ளார். ரூ.9 ஆயிரம் கோடி முதல் ரூ.12 ஆயிரம் கோடி வரை தொழிலாளர்களுக்கான செலவினங்கள் உயர்ந்துள்ளது.
423 துணை மின்நிலையங்கள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் மாற்றப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளிலும் இதே அளவிலான பணியாளர்கள்தான் இருந்தனர்.
அவர்களை வைத்துதான் சிறப்பாக மின்சேவை அளிக்கப்பட்டது. மின்வாரியத்தை பொறுத்தவரை மறைமுக டெண்டர்கள் கிடையாது. அனைத்தும் இணையதள வாயிலாகத்தான் வழங்கப்படுகிறது.
ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை அமைச்சர் வைக்க வேண்டும். அமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகள்தான் இடம்பெற்றுள்ளன.
பொதுமக்களிடத்தில் திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் குறுகிய மனப்பான்மையுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.