செந்தில் பாலாஜி
சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, ‘இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு’ என செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற டெண்டர் மற்றும் மதுபானக் கொள்முதல் பணிகளில் ரூ.1,000 கோடிக்கும் மேலாக ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை மாதம் செந்தில் பாலாஜியின் வீடு, அவர் தொடர்புடைய இடங்கள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் அலுவலகங்கள் என மொத்தம் 45 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று காலை 10.55 மணிக்கு ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
ஏடிஎஸ்பி தலைமையிலான போலீஸார், செந்தில் பாலாஜியிடம் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, டெண்டர் முறைகேட்டில் கூட்டுச்சதி புகார், உரிமம் புதுப்பிக்கப்படாமல் பார்கள் செயல்பட்டது, மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலித்தது மற்றும் ‘கட்சி நிதி’ வசூலில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. செந்தில் பாலாஜி அளித்த பதில்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவாகவும் பதிவு செய்துள்ளனர்.
விசாரணை முடிந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால், உள்நோக்கத்தோடு பதியப்பட்ட வழக்கு. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதைவிட, எதிர்க்கட்சியினர் மீது வழக்குத் தொடுப்பதிலேயே அதிக முனைப்பு காட்டி வருகிறது. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் தவெக அரசு திணறுகிறது.
உண்மையை மறைப்பதற்காகச் சட்டப்பேரவைக்குள் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி, அவையைத் திசைதிருப்ப அமைச்சர்கள் முயற்சி செய்கிறார்கள். கேள்விகளுக்குப் பதில் சொல்ல தைரியம் இல்லாமல், குதர்க்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
‘எதையும் மறைக்க மாட்டேன், நேர்மையாக நடப்பேன்’ எனப் பதவிப் பிரமாணம் எடுத்த முதல்வர், தன் கையில் வைத்துள்ள 3 கோப்புகளை வெளியிடத் தயங்குவது ஏன்? நாங்கள் சவால் விட்டு 24 மணி நேரம் கடந்தும் இன்னும் எந்தக் கோப்பும் வெளிவரவில்லை. ஏனெனில், உண்மையில் அவர்களிடம் அப்படி எந்தக் கோப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.