குதிரை பேர வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தவெக எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது, அவர்களிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தில், தவெக நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களிக்க தனக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவரையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
நிபந்தனை முன்ஜாமீன்: இந்நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.
தலா ரூ.25 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதமும் வழங்க வேண்டும். தினமும் காலை மற்றும் மாலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்து ஜாமீன் பெற்றார். தொடர்ந்து, நேற்று காலை 10.45 மணி அளவில் செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக்குமாரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியான காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் ஆஜராகினர். இளையராஜா எம்எல்ஏ அளித்த புகாரின் அடிப்படையில், இருவரிடமும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
குறிப்பாக, ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து உங்கள் பதில் என்ன? வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? புகார் அளிக்கப்பட்ட பிறகு உடனடியாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானது ஏன்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். போலீஸாரின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த செந்தில் பாலாஜி, விசாரணை முடிந்ததும் வெளியே வந்தார்.
அப்போது செந்தில் பாலாஜியிடம் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இன்னொரு நாள் விளக்கம் அளிக்கிறேன்’’ என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.