சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. அணியின் புதிய தலைவராக ஆர்.செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.அணி தலைவராக எம்.பி.ரஞ்சன்குமார் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார்.
முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரான இவர், காங்கிரஸ் தலைவர்கள் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் ஏற்கெனவே புகார் அளித்ததை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் உள்கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.அணியின் தலைவராக ஆர்.செந்தமிழ் செல்வனை நியமித்து, கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. அணி செயல் தலைவர்களாக பி.வி.தமிழ்செல்வன், ஆர்.கலைச்செல்வன் ஆகியோரை எஸ்.சி. அணியின் அகிலஇந்திய தலைவர் ராஜேந்திர பால் கவுதம் நியமித்துள்ளார்.