சென்னை: ‘கோவை புதூர் பகுதியில் பெண் காவலர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் காவல் உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியமாகும்’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கோவை புதூர் பகுதியில் இயங்கிவரும் பட்டாலியன் படைப்பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரே சக பெண் காவலர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வரை தொடர்பில் இருக்கும் காவல்துறையினரை வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, கடந்த காலங்களை ஒப்பிடும் போது குற்றங்கள் குறைந்துவிட்டதாக அரசு உயர் அதிகாரிகளை வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவதும், பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதும் வெட்கக்கேடானது.
எனவே, தமிழகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, அவர்களை சுதந்திரமாக நடமாடவே முடியாத அளவிற்கான அசாதாரண சூழலை திமுக உருவாக்கிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு அமையப்போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பெண்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.