செங்கோட்டையன்
சென்னை: “8 கட்சிகள் கூட்டணி, 10 கட்சிகள் கூட்டணியை முறியடிக்கும் சக்தி விஜய்க்கு மட்டும்தான் உண்டு. அவர் திரைப்படத்தில் மட்டும் ஹீரோ அல்ல, எதிர்கால தமிழகத்தின் ஹீரோவும் தான்.” என தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
அதில் செங்கோட்டையன் பேசும்போது, “தூங்கிக் கொண்டிருப்பவர்களின் காதுகளில் சென்று விசில் அடித்துவிடாதீர்கள், ஓட்டு போய்விடும். பேருந்து நிலையங்களில், வயதானர்கள் இருக்கும் இடத்தில் திடீரென விசில் அடித்தால் அவர்கள் தடுமாறிப் போய்விடுவார்கள். பேருந்தில் பயணம் செய்யும் போது கண்டக்டர்களும் விசில் அடிக்கமாட்டார்கள் என்ற நிலை உருவாகும்.
8 கட்சிகள் கூட்டணி, 10 கட்சிகள் கூட்டணியை முறியடிக்கும் சக்தி விஜய்க்கு மட்டும்தான் உண்டு. திரைப்படத்தில் மட்டும் ஹீரோ அல்ல, எதிர்கால தமிழகத்தின் ஹீரோவும் தான்.
திமுக, அதிமுக என எந்தக் கட்சிக்காரர்களின் வீட்டிற்கு சென்றாலும் அங்கே தவெகவிற்குதான் ஓட்டு என சொல்கிறார்கள். யாரை கேட்டாலும் தவெகவுக்கு தான் ஓட்டு என்கிறார்கள். திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே தலைவர் விஜய்தான்.
நாளை தமிழகத்தில் நல்லாட்சி கொடுக்கக்கூடிய ஆற்றலும், சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும், மனிதநேயமும், சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கக்கூடிய ஒரே தலைவர் தளபதி மட்டும் தான் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரியும். எந்த சக்தியாலும் இனி தமிழகத்தில் நம்மை தடுத்து விட முடியாது. அவர் முதல்வராக வருவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது”. இவ்வாறு அவர் பேசினார்.