எதிர்கால தமிழகத்தை ஆளும் சக்தியாக விஜய் உருவாக இருக்கிறார், என அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் கரட்டூரில், தவெக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நிகழ்ச்சியில் பங்கேற்று அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தவெகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: தவெக தலைமையின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஆணவம் என்பது உண்மையை மறைக்கும், கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது.
இளைஞர்களின் எழுச்சி நாயகனாக, எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் விஜய், சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இளைஞர்களின் எழுச்சி நாயகனாக மட்டுமின்றி எதிர்கால தமிழகத்தை ஆளும் சக்தியாக தமிழக மக்களால் உருவாக இருக்கிறார், என்றார்.