செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மக்களால் மக்களாட்சி மலர்கின்ற நல்லாட்சியை கொடுக்கக் கூடியவர் தவெக தலைவர் விஜய். மாற்றங்கள் வேண்டும் என்ற முறையில் அனைவரும் பணியாற்றி வருகிறோம்.
2026 தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதாக அமையும். தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவது குறித்து கட்சியின் தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். தவெக தலைவர் தான் தமிழகத்தின் முதல்வர் என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களை வாழ்த்தி வரவேற்போம். அதிமுக, திமுக என 2 கட்சிகளையும் தாக்கி பேசுவது தவெக தான்.
எதிர்க்கட்சி ஆளும் கட்சியை தாக்குவதில்லை, ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் குறைபாடுகளை சொல்வதில்லை. எல்லோரும் ஒருமுகமாக தவெகவை தான் தாக்கி கொண்டுள்ளனர். தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் கருத்துகளை பரிமாறலாம், பேச்சுவார்த்தை என்பது தலைவர் விஜய்யுடன் கலந்து பேசுவது தான் பேச்சு வார்த்தையாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.