செங்கோட்டையன்
“எங்களால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் மற்றும் வாய்ப்புகளும், நன்மைகளும் கிடைத்துள்ளன” என, தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழக வெற்றி கழகத்தினால் பலருக்கு நன்மை நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணியை, அப்படி தான் பார்க்க வேண்டும். தவெகவின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து, விஜய் முடிவு எடுப்பார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை, விஜய் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்.
விரைவில் அது வெளியிடப்படும். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சசிகலா, புகழேந்தி புதிய கட்சிகளை தொடங்கியுள்ளது, அவரவர் விருப்பம். ஆனால் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தது வேதனைக்குரிய ஒன்று.
தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும், இன்னும் கூட்டணிகளையே இறுதி செய்யவில்லை, ஆனால் எங்களிடம் வேட்பாளர்கள் பட்டியல், இறுதியாகிவிட்டதா என்று எதற்காக கேட்கிறீர்கள்?
புதிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா என்பதை, பொறுத்திருந்து பாருங்கள். தவெக-வின் அடுத்த மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் எந்த பகுதியில் நடத்த வேண்டும்? என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
எங்களால் காங்கிரஸ் கட்சிக்கு நன்மை, மற்றும் கூடுதல் இடங்களும்(சீட்), வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. தவெகவை காட்டி திமுகவை பயமுறுத்தி அதிக தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. மாற்றுக் கட்சியினருக்கும் எங்களால் நன்மை கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.