

ப.சிதம்பரம்
“பாஜக, நல்ல வேளையாக அதிமுகவை தொட்டுள்ளது. இதனால் அதிமுக அடுத்த 5 ஆண்டுகளில் இருக்குமா என்பது தெரியவில்லை” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: திமுக தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது. கூட்டணியில் அனைவருக்கும் சந்தோஷம் நிலைக்கும். பாஜக, நல்ல வேளையாக அதிமுகவை தொட்டுள்ளது. இதனால் அதிமுக அடுத்த 5 ஆண்டுகளில் இருக்குமா என்பது தெரியவில்லை.
ஆமை புகுந்த வீடும் அமித்ஷா புகுந்த வீடும் ஒருபோதும் உருப்படாது. அதேபோல் பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது. முதல்வர் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார், நானும் தெளிவாக உள்ளேன். தமிழகத்தில் பாஜக நுழைந்து விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளோம். ஈரானுக்கு எந்தவித அனுதாபமும் சொல்லாமல் இஸ்ரேலுக்கு துணையாக இருப்போம் என கூறியவர்தான் பிரதமர்.
ரஷ்யா, உக்ரைன்போர் நடக்கும்போது இது போருக்கான யுகம் அல்ல என பிரதமர் கூறினார். இந்தியா அமெரிக்காவின் அடிமையாகிவிட்டது. அமெரிக்க அதிபர் வற்புறுத்தல் காரணமாக இரு நாடும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்கா ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு பூஜ்யம் வரியும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு 15 சதவீதமும் வரி என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அதிமுகவின் கூட்டணியில் பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் தமிழ்மொழி அழிந்துவிடும். ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் பேச்சுமொழி, எழுத்து மொழி, ஆட்சி மொழியாக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே பலகாலமாக செயல்பட்டு வருகின்றன. நாம் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையாள வேண்டும்.
அதிமுக – பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் பாஜக நுழைய முடியாத அளவுக்கு சிந்தித்து செயலாற்ற வேண்டும். வரக்கூடிய தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக தெளிவாக தெரிகிறது. திமுக தலைமையில் முதல்வராக ஸ்டாலினை அமரவைத்து தமிழ்மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.