சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களை இந்தியாவுக்கு மீட்டுவர மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாகப்பட்டினம் எம்.பி. வை.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாகை எம்.பி. வை.செல்வராஜ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த நவ. 3, 4-ம் தேதிகளில் இந்திய-இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 36 பேர் மற்றும் மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த சில மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பின்னர், நவ. 17-ம் தேதி இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும், தூதரக ஒப்புதலுக்காக இலங்கையில் தொலைதூர முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை.
நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களும் அதே இடத்தில் தங்கியுள்ளதால், இந்திய மீனவர்கள் சரியான உணவு, தங்குமிடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கையில் பணம்கூட இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தங்களது நிலைகுறித்த வீடியோ பதிவுகளை அவர்கள் எங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
மேலும், மீனவர்களின் குடும்பத்தினர் மிகவும் பதற்றத்தில் உள்ளனர். இலங்கையில் உள்ள மீனவர்களை மீட்டு, இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்கக் கோரி இந்திய தூதரகத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியும், நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, இந்தியமீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் இந்தியாவுக்கு விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.